Last Updated : 29 Dec, 2020 06:38 PM

 

Published : 29 Dec 2020 06:38 PM
Last Updated : 29 Dec 2020 06:38 PM

டெல்லியில் அமர்ந்துகொண்டு விவசாயம் செய்ய முடியாது; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் நாளை ஆலோசனை: சரத் பவார் குற்றச்சாட்டு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் : கோப்புப்படம்

புதுடெல்லி

மாநிலங்களுடன் ஆலோசனை ஏதும் நடத்தாமல் மத்திய அரசு வேளாண் சட்டங்களைக் கட்டாயப்படுத்தி திணிக்கிறது. விவசாயம் என்பது டெல்லியில் அமர்ந்து செய்யக்கூடிய வேலை அல்ல. அவ்வாறு செய்யவும் முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் நடத்திவரும் போராட்டம் 2-வது மாதத்தைத் தொட்டுள்ளது. இதுவரை 5 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டவில்லை.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் கொண்ட குழு என்ன செய்கிறது? ஆளும் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், விவசாயம் குறித்தும், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தும் ஆழ்ந்த புரிதலோடு அணுக வேண்டும்.

விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளைக் குற்றம் சுமத்தும் பிரதமர் மோடியின் செயல் நியாயமற்றது. விவசாயிகள் பிரச்சினையை மத்திய அரசுதான் தீவிரமாக எடுத்துப் பரிசீலிக்க வேண்டும்.

விவசாயிகள் பிரச்சினையில், விவசாயிகளுடன் 6-வது கட்டப் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தோல்வி அடைந்தால், என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் நாளை கூடி ஆலோசிக்க இருக்கிறோம்.

மன்மோகன் சிங் ஆட்சியில் நான் வேளாண் துறை அமைச்சராக இருந்தபோது சீர்திருத்தம் செய்ய விரும்பினேன் என அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். ஆம், நாங்கள் வேளாண்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய விரும்பினோம். ஆனால், பாஜக செய்யும் சீர்திருத்ததைப் போல் அல்ல. பாஜக அரசின் சீர்திருத்தங்களில் இருந்து அது மாறுபட்டது.

நாங்கள் சீர்திருத்தங்கள் கொண்டுவரும் முன் அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசித்தோம். மாநிலங்கள் கூறிய சிக்கல்களுக்கு சுமுகமாகத் தீர்வு காணப்படும்வரை நான் சீர்திருத்தங்களை முன்னோக்கி நகர்த்தவில்லை. சில மாநிலங்களில் இருக்கும் அமைச்சர்கள் சீர்திருத்தங்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆதலால், நாங்கள் மாநில அரசுகளுடன் கடிதம் எழுதிக் கருத்துக் கேட்டோம்.

ஒருவிஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். விவாசயத்தை டெல்லியில் அமர்ந்துகொண்டு செய்ய முடியாது. கிராமங்களில் கடினமாக உழைக்கும் விவசாயிகள் இதில் ஈடுபட்டுள்ளார்கள். ஆதலால், அரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்க வேண்டும்.

பெரும்பாலான மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்போது, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசி, சந்தேகங்களைத் தீர்த்து வைத்து, முன்னோக்கி நகர்த்திச் செல்வது மத்திய அரசின் கடமை.

வேளாண் சட்ட மசோதாவைத் தயாரிக்கும்போது மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவும் இல்லை. எந்த மாநில வேளாண் அமைச்சர்களையும் அழைத்து ஆலோசிக்கவும் இல்லை.

மத்திய அரசு தன்னுடைய சொந்த பலத்தைப் பயன்படுத்தி இந்த மசோதாவைத் தயார் செய்து, இதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதால்தான் பிரச்சினை தொடங்கியது. அரசியலில் ஜனநாயகமும், பேச்சுவார்த்தையும் நடக்க வேண்டும்.

இந்தச் சட்டங்கள் குறித்து மாநிலங்களுடன் முன்கூட்டியே மத்திய அரசு பேசி விவசாயிகளுக்கு இந்தச் சட்டத்தில் இருக்கும் பிரச்சினைகள், சிக்கல்களைக் கேட்டுத் தீர்த்து வைக்க முயன்றிருக்கலாம்.

ஜனநாயகத்தில் நான் எதையும் கேட்கமாட்டேன். நான் இருக்கும் இடத்திலிருந்து மாறமாட்டேன் என்று எப்படி ஓர் அரசு கூற முடியும்?

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் மாநிலங்கள் மீது திணிக்கிறது. மாநிலங்களுடன் பேசி நம்பிக்கையை மத்திய அரசு ஏற்படுத்தியிருந்தால், இந்தச் சூழலைத் தவிர்த்திருக்கலாம்''.

இவ்வாறு சரத் பவார் தெரிவி்த்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x