

வெளியில் இருந்து வந்தவர்கள் (பாஜக), எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கலாம். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை விலைக்கு வாங்கலாம் என நினைக்காதீர்கள் என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த ஒருவாரத்துக்கு முன் இதே போல்பூரில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேரணியும், ஊர்வலமும் நடத்தினார். அதே நகரில் தற்போது மம்தா பானர்ஜி இன்று ஊர்வலம் நடத்தினார்.
கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொல்கத்தாவுக்கு வந்திருந்தபோது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பின் வெளியே வராமல் இருந்த மம்தா பானர்ஜி முதல் முறையாக இன்று போல்பூரில் பேரணி நடத்தி பாஜகவை விமர்சித்துள்ளார்.
போல்பூரில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடந்த பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''வெளியில் இருந்து வந்தவர்கள் (பாஜக) வெறுப்பு அரசியலையும், போலியான அரசியலையும் கொண்டு வந்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் முதுகெலும்பைச் சிதைக்க முயல்கிறார்கள். ஆனால், ரவிந்திரநாத் தாகூர் மண்ணில் அதுபோன்று ஏதும் நடக்காது.
வெளியில் இருந்து வந்தவர்களால் எம்எல்ஏக்களை மட்டும்தான் விலைக்கு வாங்க முடியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை வாங்க முடியும் என நினைக்காதீர்கள். மகாத்மா காந்தி போன்ற மதிப்புமிக்க பல்வேறு தலைவர்கள் மீது மதிப்பு இல்லாதவர்கள்தான் வங்கத்தைத் தங்கமாக மாற்றுவோம் எனப் பேசுகிறார்கள்.
ஆனால், வங்காளம் ஏற்கெனவே தங்கமாகத்தான் இருக்கிறது. இதை ரவீந்திரநாத் தாகூர் ஒரு கவிதையிலேயே குறிப்பிட்டுள்ளார். இப்போது நாம் செய்ய வேண்டியது, பாஜகவின் வகுப்புவாதத்தில் இருந்து மாநிலத்தைக் காக்க வேண்டும்.
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஜகவைச் சேர்ந்தவர். இந்தப் பல்கலைக்கழகத்தில் வகுப்புவாத அரசியல் வந்துள்ளதை நினைத்து வேதனைப்படுகிறேன். பாரம்பரியமிக்க இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் பிரிவினைவாதம், வகுப்புவாதத்தைக் கொண்டுவந்து சிதைக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
ஆனால், ரவீந்திரநாத் தாகூரின் மண் ஒருபோதும் மதச்சார்பின்மையை அழித்துவிட்டு வகுப்புவாத அரசியல் மேலே வர இடம் அளிக்காது''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.