Published : 29 Dec 2020 04:19 PM
Last Updated : 29 Dec 2020 04:19 PM

சித்தியின் கொடுமையிலிருந்து மீட்கப்பட்டவர்: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தத்தெடுத்த வளர்ப்பு மகளுக்கு திருமணம்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் வளர்ப்பு மகள் பிரதியுஷா -சரண் திருமணம்: படம் உதவி ட்விட்டர்

ஹைதராபாத்


கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சித்தியின் கொடுமைக்கு ஆளாகி மோசான நிலையில் இருந்த இளம் பெண்ணைத் தத்தெடுத்து வளர்ப்பு மகளாக ஏற்றுக்கொண்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், அவருக்கு நேற்று திருமணம் செய்து வைத்தார்.

ஹைதராபாத்தில் உள்ள கேசம்பேட்டை சாத்நகரில் நேற்று சந்திரசேகர் ராவின் வளர்ப்பு மகள் சி. பிரதியுஷாவுக்கும், ஐடி பொறியாளர் சரணுக்கும் நேற்று திருமணம் நடந்தது.

பிரதியுஷா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், பட்டிகடா பகுதியில் உள்ள லூர்து மாதா தேவாலாயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு தெலங்கானா முதல்வராக சந்திரசேகர் ராவ் இருந்தபோது, ஹைதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது சித்தியாலும் தந்தையாலும் ஒரு இளம் பெண் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார் என்ற செய்தி வெளியானது.

இதையடுத்து, தெலங்கானா குழந்தைகள் நலத்துறை சார்பில் அதிகாரிகள் சென்று அந்த பெண்ணை மீட்டபோது, அந்தப் பெண் உடலில் ஏராளமான காயங்கள், கத்தியால் அறுத்த தடையங்கள், சூடுபட்ட காயங்கள் இருந்தன.

இதையடுத்து, அந்த பெண்ணின் சித்தி ஷியாமளா, தந்தை சி.ரமேஷ் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண்தான் பிரதியுஷா. முதல்வர் சந்திரசேகர் ராவும், அவரின் மனைவி ஷோபா, மகள் கே. கவிதா ஆகியோர் பிரதியுஷாவை அரசு காப்பகத்தில் சந்தித்தனர்.

அதன்பின் முதல் சந்திரசேகர் ராவ், வெளியிட்ட அறிவிப்பில், எனக்கு ஏற்கெனவே கவிதா எனும் மகள் இருக்கிறார், பிரதியுஷாவை 2-வது மகளாக தத்தெடுக்கிறேன் எனத் தெரிவித்தார்.

அதன்பின் பிரதியுஷாவை கடந்த 5 ஆண்டுகளாக அரசின் காப்பகத்தில் சேர்த்து படிக்கவைத்தார். பிரதியுஷாவும் செவிலியர் பட்டப்படிப்பு முடித்து தற்போது தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார்.

தெலங்கானா முதல்வரின் மனைவி ஷோபா பிரதியுஷாவை வாழ்த்திய காட்சி

பிரதியுஷாவுக்கு 24 வயதானவுடன், முதல்வர் சந்திரசேகர் ராவ், அவரின் முயற்சியால், பிரிதியுஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்து முடித்தார். ஹைதராபாத்தில் உள்ள ஐடி பொறியாளர் சரண் என்பவரை மாப்பிள்ளையாக சந்திரசேகர் தேர்வு செய்து நிச்சயம் செய்தார்.

இந்நிலையில் பிரதியுஷா, சரண் ஆகியோரின் திருமணம் நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. திருமணத்துக்கு முதல்நாள் நடந்த நிகழ்ச்சியில் முதல்வரின் மனைவி, மணப்பெண் பிரதியுஷாவுக்கு நகைகளை அணிவித்தார். திருமணத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசின் குழந்தைகள் நலத்துறை சார்பில் செய்யப்பட்டது.

மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சத்யவதி ரத்தோடு, எம்எல்ஏ அஞ்சையா யாதவ், மகளிர் மேம்பாட்டுத்துறை ஆணையர் திவ்யா தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x