

அசாம் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான அஜந்தா நியோக் இன்று பாஜகவில் இணைந்தார்.
அசாமில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னதாக, காங்கிரஸின் முன்னாள் அமைச்சரும், கோலகாட் தொகுதி எம்எல்ஏவுமான அஜந்தா நியோக்கை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காங்கிரஸ் நீக்கியது.
முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் கன்வீனர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரை அஜந்தா சந்தித்தார். தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் அஜந்தா ஈடுபட்டு வருவதாகக் கூறி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் அவரை நீக்கியது.
அதனைத் தொடர்ந்து 2 நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை அசாம் வந்த பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சனிக்கிழமை அஜந்தா நியோக் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில், அஜந்தா நியோக் இன்று பாஜகவில் சேர்ந்தார். கவுகாத்தியில் பாஜக மூத்த தலைவரும் அமைச்சருமான ஹேமானந்த பிஸ்வா சர்மா முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து அசாம் முன்னாள் அமைச்சர் அஜந்தா நியோக் ஊடகங்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு இல்லை. கட்சி தலைவர்களுக்கும் மக்களுக்கும் தொடர்புஇல்லை. இதுபோன்ற கட்சியில் நீடிக்க விரும்பவில்லை. அந்தக் கட்சியை விட்டு வெளியேறிவிட்டேன். நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பாஜகவில் இணைவதை பெருமையாக எண்ணுகிறேன்." என்றார்.