

பிஹாரைப் போலவே கரோனாபாதுகாப்பு முன்னெச்சரிக்கைஏற்பாடுகளுடன் 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டில் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நடத்தினார். இதில் தேர்தல் ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில் சுனில் அரோரா கூறியதாவது:
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர், நவம்பரில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது. 7 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிஹாரில் சிறப்பான முறையில் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்தோம். சுமார் 4 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர். ஒரு வாக்குச்சாவடியில் 1,000 முதல் 1,200 வாக்காளர்கள் இருக்குமாறு வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டன. இதனால் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகமானது.
இருந்தபோதும் கரோனா வைரஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டன. வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு கையுறைகள், முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு உடைகள், சானிடைசர்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டன. மேலும்வாக்குச்சாவடிக்கு வரும் வாக் காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பிரச்சினையிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்தலை எங்களால் நடத்த முடிந்தது. எனவே கடந்ததேர்தலைக் காட்டிலும் இந்தத்தேர்தலிலும் கூடுதல் வாக்காளர் கள் வாக்களித்துள்ளனர்.
லட்சக்கணக்கான அதிகாரிகள், பாதுகாப்புப்படை வீரர்கள், சமூக நல அமைப்புகள், தனிநபர்களின் ஒத்துழைப்பால் தேர்தலை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.
தற்போது அதைப் பின்பற்றி அடுத்த ஆண்டில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலை நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.