

இந்த (21-ம்) நூற்றாண்டு ஆசியாவினுடையதாக இருக்கும் என்ற கனவை நனவாக்கும் வகையில், இந்தியா, சீனாவின் பொருளாதார வளர்ச்சி அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.
சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தேசிய தினம் கொண்டாடும் சீன மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. நம் இரு நாடு களும் இணைந்து இந்த உல கத்தை மிகச் சிறந்த நிலைக்கு கொண்டுசெல்ல முடியும். 21-வது நூற்றாண்டு ஆசியாவினுடைய தாக இருக்கும் என்ற கனவை நனவாக்குவதற்கு நம் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார். இதுபோல் நானும் இந்த ஆண்டு மே மாதம் சீனாவுக்கு சென்றிருந்தேன். இந்தப் பயணம் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்தி உள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த உறவு மேலும் வலுவடையும் என்று நம்புகிறேன். இரு நாடுகளும் வளர்ச்சி அடையவும் வளம் பெறவும் நாம் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி தேசிய தினமாக கொண் டாடுவது என, கடந்த 1949-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி சீன அரசு தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.