

அசாம் அரசின் நிதியுதவியுடன் முஸ்லிம்களால் நடத்தப்படும் மதரஸாக்களை ரத்து செய்து, அதைப் பள்ளிகளாக மாற்றும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டால், 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அசாமில் உள்ள மதரஸாக்கள் அனைத்தும் பள்ளிகளாக மாற்றப்படும். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும், கல்வித்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அசாம் திரும்பப் பெறும் சோதா 2020 என்ற பெயரில், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், அசாம் மதரஸா கல்விச் சட்டம்-1995, அசாம் மதரஸா கல்விச் சட்டம் -2018 ஆகிய இரண்டும் திரும்பப் பெறப்படுகின்றன.
இதுகுறித்து அசாம் கல்வித்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
“இந்த மசோதாவால் மதரஸாக்களில் பணியாற்றுவோருக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது. ஆசிரியர்களுக்கு ஊதியக் குறைப்பு, சீனியாரிட்டி என எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால், இனிமேல் மதரஸாக்கள் அனைத்தையும் அசாம் உயர் கல்வித்துறை ஏற்று நடத்தும்.
ஒரு குறிப்பிட்ட மதரீதியான பாடங்களை மட்டும் படிப்பதற்குப் பதிலாக ஏராளமான பாடங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படும். அசாம் அரசின் கொள்கை முடிவின்படி, 2021ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல், மாநிலத்தில் உள்ள அரசின் நிதியுதவி பெற்று நடத்தப்படும் மதரஸாக்கள், தனியார் மதரஸாக்கள் அனைத்தும் மாநில பள்ளிக் கல்வி, உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் வரும்.
மதரீதியான சிந்தாந்தங்கள், தத்துவங்களைக் கற்றுக் கொடுப்பதற்கு அரசு எதிராகச் செயல்படவில்லை. ஆனால், ஒரு மதத்துக்கு மட்டும் சலுகை காட்ட முடியாது. மதரஸாக்களை நடத்த அரசு நிதியுதவி அளித்தால், பகவத் கீதை, பைபிள், குருகிராந்த் ஆகியவற்றையும் கற்றுக்கொடுக்க பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.
அவ்வாறு இருந்தால், நமது பிள்ளைகளுக்கு அறிவியல், கணிதம் ஆகியவற்றைக் கற்பிக்க முடியாது. அசாமில் கல்வித்துறை என்பது மதச்சார்பற்ற தன்மையாக இருக்க வேண்டும்.
சில மதரஸாக்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்பட்டு வருகின்றன. அசாமின் முதல் முதல்வர் சயத் முகமது சாதுல்லாவால் உண்டாக்கப்பட்டது என்பது தெரியும். காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மதரஸாக்கள் என மொத்தம் 610 மதரஸாக்கள் இருக்கின்றன.
இன்னும் 300 மதரஸாக்கள் தொடங்க விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால், அரசுக்கு எதையும் மூட விருப்பமில்லை. தற்போதுள்ள 610 மதரஸாக்களுக்கு ஆண்டுதோறும் ரூ.260 கோடி செலவிடப்படுகிறது”.
இவ்வாறு சர்மா தெரிவித்தார்.