

நாட்டின் முதல் தானியங்கி மெட்ரோ ரயிலை டெல்லியில் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, 2025-ம் ஆண்டுக்குள் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில் சேவை டெல்லியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன், பிங்க் நிற லைனில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சிபிடிசி எனப்படும் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இந்த தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
நாட்டிலேயே முதல் முறையாக தானியங்கி மூலம் செயல்படும் மெட்ரோ ரயிலே காணொலி மூலம் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அனைத்து வழித்தடங்களிலும் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான தேசியப் பொதுப் பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
இந்தப் பயண அட்டை வைத்திருப்பவர்கள் விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் சேவையைப் பயன்படுத்த முடியும். பேருந்துப் பயணக் கட்டணம், பிற மார்க்கங்களில் பயணிப்பது உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்ளலாம். வாகன நிறுத்துமிடக் கட்டணம், சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம். இந்த அட்டை மூலம் பணம் கூட ஏடிஎம்களில் எடுத்துக்கொள்ள முடியும்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
''அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் முதல் முறையாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு எங்களுடைய அரசு ஆட்சிக்கு வந்தபோது, நாட்டில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதி இருந்தது.
ஆனால், இன்று 18 நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து இருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதி கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்துவதில் இந்தியாவில் தயாரிப்புத் திட்டம் மிகவும் முக்கியமானது. இது செலவைக் குறைத்து, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி, வெளிநாட்டு கரன்சியை மிச்சப்படுத்த உதவும். மெட்ரோ ரயில் விரிவுபடுத்துதல், நவீன காலப் போக்குவரத்து போன்றவை நகர மக்களின் தேவைக்கு ஏற்றாற்போலும், வாழ்க்கை முறைக்கு ஏற்பவும் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் பல்வேறு நகரங்களில், பல்வேறு விதமான மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் போக்குவரத்து சில நாடுகளில் மட்டுமே இருக்கிறது. அதில் இந்தியாவும் முக்கிய இடம் பிடித்துள்ளது. மக்களுக்கு உதவுவதற்காக ஒருங்கிணைந்த சேவைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி, பாஸ்டேக் கார்டு, வேளாண் சந்தை, ஒரு தேசம் ஒரு ரேஷன் அட்டை போன்றவற்றைச் செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2014-ல் 248 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் போக்குவரத்து இருந்தது. இன்று அதைவிட 3 மடங்கு அதிகமாக, 700 கி.மீ. அதிகமாக மெட்ரோ ரயில் போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 25 நகரங்களுக்கு விரிவுபடுத்தி 1700 கி.மீ. உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.