

அருண் ஜெட்லியுடன் பழகியவர்கள் அவரது அன்பான ஆளுமையை இழந்து தவிக்கிறார்கள் என்று அவரது பிறந்த நாளில் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
1952இல் பிறந்த ஜெட்லி, இந்தியாவின் நிதி அமைச்சராகப் பணியாற்றியவர்; கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மறைந்தார். பல ஆண்டுகளாகப் பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம் மிகவும் வெளிப்படையான கட்சியின் குரலாக இருந்தவர் என்றும், கட்சிக்காக அவரது கூர்மையான அரசியல் திறன் மிகவும் பயன்பட்டுள்ளது என்றும் பாஜக தலைவர்கள் நினைவுகூர்ந்தனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
"எனது நண்பரான அருண் ஜெட்லியை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறோம். அவரது அன்பான ஆளுமை, கூர்மையான புத்திசாலித்தனம், சட்டத்தின் அறிவு ஆகியவற்றை அவருடன் நெருக்கமாகப் பழகிய அனைவரும் இழந்து தவிக்கிறார்கள். இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அவர் அயராது உழைத்தார்.''
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
அமித் ஷா அஞ்சலி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது அஞ்சலிக் குறிப்பில் கூறுகையில், ''ஜெட்லி ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். அவரது அறிவும் நுண்ணறிவுத் திறனும் ஒன்றாக இணைந்திருப்பது மிகச் சிலருக்கே வாய்க்கக்கூடியது. அவர் இந்திய அரசியலுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கினார். மேலும் மிகுந்த ஆர்வத்துடனும் பக்தியுடனும் தேசத்திற்கு சேவை செய்தார். எனது இதயபூர்வமான அஞ்சலி'' என்று தெரிவித்துள்ளார்.
ஜே.பி.நட்டா
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தனது அஞ்சலிக் குறிப்பில், ''ஜெட்லி ஒரு சொற்பொழிவாளர் மற்றும் திறமையான அரசியல் வித்தகர். அவரை எப்போதும் கட்சி நினைவில் வைத்திருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ''இந்தியாவின் பொது வாழ்க்கையில் ஜெட்லியின் பங்களிப்பு மற்றும் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் வகித்த பங்கு எப்போதும் நினைவுகூரத்தக்கது'' என்றார்.