

ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை சீக்கிரம் அமல்படுத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ரத்தத்தால் கையெழுத்திட்ட மனுவை அனுப்ப தயாராகியுள்ளனர் முன்னாள் ராணுவ வீரர்கள்.
ஒரே பதவி வகித்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் திட்டம் ஜூலை 1 2014 முதல் கணக்கிட்டு செயல்படுத்தப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் அறிவித்தார்.
ஆனால், அத்திட்டம் இன்னமும் அமலுக்கு வரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 100 பேர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ரத்தத்தால் கையெழுத்திட்ட மனுவை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்ப தயாராகியுள்ளனர்.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் குழுமிய யுனைடட் பிரன்ட் ஆஃப் எக்ஸ் சர்வீஸ்மேன் மூவ்மென்ட் என்ற அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை தயாரித்து கையெழுத்திட்டனர்.
இந்த அமைப்பின் தலைவர் சத்பீர் சிங் கூறும்போது, "ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு தயங்குகிறதோ என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது" என்றார்.