

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விரும்புவார் என நான் நினைக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்குள் விரைவில் நடைபெற இருக்கும் உட்கட்சித் தேர்தலுக்குப்பின், தலைவர் பதவி மாறினால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் பதவியும் மாறக்கூடும்,
அந்தப் பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பொருத்தமாக இருப்பார் எனத் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் சரத்பவார் பேசி வருவதாகவும் தகவல்கள் ஊடங்களில் வெளியாகின.
சரத்பவாரை யுபிஏ தலைவராக்கலாம் என்று சிவசேனா கட்சியும் முன்மொழிந்தது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் அவ்வாறு எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை, சரத்பவார் யாருடனும் பேசவில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ேநற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் யுபிஏ தலைவர் பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விரும்புவதாக தகவல் வெளியானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ப.சிதம்பரம் கூறியதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் பதவி என்பது ஒன்றும் பிரதமர் பதவி அல்ல. அந்தப் பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விரும்புவார் என நான் நினைக்கவில்லை. அப்படி எந்தப் பேச்சும் இல்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சந்திக்கும்போது, மிகப்பெரிய கட்சியின் தலைவர்தான் இயல்பான தலைவராக இருப்பார். அவர்தான் அழைப்பு விடுப்பார், இயல்பான தலைவர்தான் கூட்டத்தையும் கூட்டுவார். நாங்கள் ஒன்றும் பிரதமரைத் தேர்வு செய்யவில்லையே. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்பதில் வேறு ஒன்றும் இல்லை.
ஐக்கிய முற்போக்குக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கூடினால், அந்தக் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர்தான் பொறுப்பேற்று நடத்துவார் என்பதுதான் இயல்பானது. ஏனென்றால் கூட்டணியில் பெரிய கட்சி காங்கிரஸ் தானே.
இந்தக் கூட்டணியை தேசிய அளவில் வலுப்படுத்த, கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். சில கட்சிகள் முயற்சி எடுத்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தை கூட்டமுயலலாம். அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும். ஆனால், காங்கிரஸ் கூட்டத்தைக் கூட்டினால், அதுதான் இயல்பான கூட்டமாக இருக்கும் அதன் தலைவர்களே கூட்டத்தை நடத்துவார்கள்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளைப் பொருத்தவரை, காங்கிரஸ் கட்சிக்குத்தான் நாடாளுமன்றத்தில் அதிகமான எம்.பி.க்கள் உள்ளனர். யுபிஏ கூட்டணியில் 9 முதல் 10 கட்சிகள் இருக்கின்றன. ஆனால், மிகப்பெரிய கட்சி காங்கிரஸ் கட்சிதான். மக்களவை, மாநிலங்களவையில் சேர்த்து காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஏறக்குறைய 95 உறுப்பினர்கள் இருக்கிறர்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.