

சாகித்ய அகாடமி பொதுக்குழுவில் இருந்து கன்னட எழுத்தாளரும், ஆய்வாளருமான அரவிந்த் மாளகத்தி ராஜினாமா செய்துள்ளார். மூத்த கன்னட எழுத்தாளரும், முற்போக்கு சிந்தனையாளருமான எம்.எம்.கல்புர்கி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அகாடமி மவுனம் சாதிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், பஞ்சாபைச் சேர்ந்த குர்பச்சன் புல்லர், அஜ்மீர் சிங் அவுலக், அடாம்ஜித் சிங் மற்றும் குஜராத் எழுத்தாளர் கணேஷ் தேவி ஆகிய நால்வரும் தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளிப்பதாக நேற்று அறிவித்துள்ளனர்.
அரவிந்த் மாளகத்தி கூறும்போது, “பொதுக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அகாடமி தலைவர், செயலாளர் ஆகியோருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டேன். கல்புர்கி கொலை விவகாரத்தில் அகாடமி மவுனம் சாதிப்பதற்கு என் கண்டனத்தை இவ்வகையில் பதிவு செய்துள்ளேன். இதுபோன்ற விவகாரங்களில் அகாடமி தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். கல்புர்கி, கோவிந்த் பன்சாரோ கொலை, தாத்ரி சம்பவம் போன்றவை தேசத்தின் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். அவை கடும் கண்டனத்துக்கு உரியவை” என தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாடமியில் 20 பிரதிநிதிகள் பொதுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மாளகத்தியும் ஓர் உறுப்பினராக இருந்தார். இவரின் படைப்புகளைப் பாராட்டி, அம்பேத்கர் ஃபெல்லோஷிப் விருதை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
அவரின் ‘கவர்மெண்ட் பிராமணன்' கன்னடத்தில் வெளிவந்த முதல் தலித் சுயசரிதை நூலாகக் கருதப்படுகிறது. அந்நூல் கன்னட சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது.
ஏற்கெனவே பலர் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்துள்ள நிலையில், மாளகத்தியின் ராஜினாமா அகாடமிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மவுனம் கலைத்தது அகாடமி
எழுத்தாளர்களின் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், சாகித்ய அகாடமி முதன்முறையாக தனது மவுனத்தைக் கலைத்துள்ளது. கருத்துரிமை, மதச்சார்பற்ற நெறிகளில் அகாடமி உறுதியான ஈடுபாடு காட்டி வருவதாக அதன் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதி, நிறம், இனம், நாடு கடந்து அனைத்து எழுத்தாளர்களின் கருத்துரிமைக்கு ஆதரவாக அகாடமி உள்ளது. எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீதான தாக்குதல் எங்கு நடந்தாலும் அதனை சாகித்ய அகாடமி கண்டிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற நெறிகளின் மையக்கரு மற்றும், அனைவருக்கும் உயிர்வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றின் பக்கம் சாகித்ய அகாடமி உறுதியாக நிற்கிறது. இதுபோன்ற விவகாரங்களில் அகாடமி மவுனம் சாதிக்கிறது என வெளியாகும் தகவல்கள் வேதனையை அளிக்கின்றன.” என தெரிவித்துள்ளார்.