Last Updated : 27 Dec, 2020 04:47 PM

 

Published : 27 Dec 2020 04:47 PM
Last Updated : 27 Dec 2020 04:47 PM

ராகுல் காந்தி 2015-ம் ஆண்டு பேசிய வீடியோ: ஜே.பி. நட்டா கிண்டல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2015-ம் ஆண்டு அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்தபோது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக நிறுவனங்களிடம் விற்க அனுமதிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த வீடியோவை வெளியிட்டு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கிண்டல் செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஒரு மாதமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிற்கின்றன. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்குத்தான் ஆதரவாக உள்ளன என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் 2015-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியதாவது:

“சில ஆண்டுகளுக்கு முன் நான் உத்தரப் பிரதேசத்தில் இருந்தபோது ஒரு விவசாயி என்னிடம் வந்து, தான் விளைவிக்கும் உருளைக்கிழங்கு சந்தையில் 2 ரூபாய்க்குதான் எடுக்கப்படுகிறது. ஆனால், தன்னுடைய பேரக்குழந்தைகள் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டை 10 ரூபாய்க்கு வாங்குகிறார்களே அது எப்படி? விலையில் எப்படி மாயம் நடக்கிறது எனக் கேட்டார்.

என்ன காரணமாக இருக்கும் என நான் அவரிடம் கேட்டேன். அதற்கு விவசாயி, 'தொழிற்சாலைகள் வெகுதொலைவில் இருக்கின்றன. ஆனால், நாங்களே நேரடியாகப் பொருட்களை தொழிற்சாலையில் விற்றால், இடைத்தரகர்கள் இன்றி முழுப் பணத்தையும் பெற முடியும். ஆதலால் உணவுப் பூங்கா அமைக்க வேண்டும். இதற்காகத்தான் கடந்த 12 ஆண்டுகளாக அமேதி விவசாயிகள் போராடி வருகிறார்கள்' என்று கூறினார்”.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்த வீடியோவை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “என்ன மாயஜாலம் நடந்தது ராகுல்ஜி. இப்போது வேளாண் சட்டங்களை எதிர்க்கிறீர்கள்? முன்பு எதற்காக ஆதரவு தெரிவித்தீர்கள். நாட்டின் நலனுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் நீங்கள் ஒன்றுமை செய்தது இல்லை. அரசியல் மட்டுமே செய்கிறீர்கள். உங்களின் துரதிருஷ்டம், உங்களின் போலித்தனம் வேலை செய்யவில்லை. உங்களின் இரட்டை நிலைப்பாட்டை நாட்டு மக்களும், விவசாயிகளும் உணரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x