

காஷ்மீரில் கோயிலைத் தாக்கத் திட்டம் தீட்டிய தீவிரவாதிகளின் சதியை முறியடித்த பாதுகாப்புப் படையினர், சந்தேகத்திற்குரிய வகையில் இயங்கிவந்த நான்கு பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ளூர் காவல்துறையின் சிறப்புச் செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) 49 ராஷ்டிரிய ரைஃபிள்ஸின் படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆரி கிராமத்தில் உள்ள கோயிலைத் தாக்க சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து பூஞ்ச் மாவட்டத்தின் மூத்த காவல் கணகாணிப்பாளர் ரமேஷ் குமார் அங்க்ரல் கூறியதாவது:
உள்ளூர் காவல்துறையின் சிறப்புச் செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) 49 ராஷ்டிரிய ரைஃபிள்ஸின் படையினருடன் இணைந்து சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மெந்தர் செக்டரில் பசூனி அருகே வாகன சோதனை மேற்கொண்டோம். அப்போது வாகன சோதனையின்போது தப்பிச் செல்ல முயன்ற கல்ஹுதா கிராமத்தைச் சேர்ந்த முஸ்தபா இக்பால் மற்றும் முர்தாசா இக்பால் ஆகிய இரு சகோதரர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தோம். அவர்கள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய நபர்கள் ஆவர்.
பசூனியில் அமைந்துள்ள 49 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பட்டாலியன் தலைமையகத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முஸ்தபாவுக்கு பாகிஸ்தான் எண்ணிலிருந்து அழைப்பு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விசாரித்தபோது, ஆரி கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் கையெறி குண்டு வீசும் பணியை ஏற்றுக்கொண்டதாக அவர் ஒப்புக் கொண்டார்.
கையெறி குண்டு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த வீடியோவும் அவரது தொலைபேசி வாயிலாகப் பெறப்பட்டது. பின்னர், அவரது வீட்டில் தேடியபோது, ஆறு கையெறி குண்டுகள் மற்றும் இதுவரை அறியப்படாத காஷ்மீர் கஸ்னவி படையின் சில சுவரொட்டிகள் அங்கிருந்து மீட்கப்பட்டன. கஸ்னவி படை என்பது ஜெய்ஷ் இ முகமதுவின் ஒரு பிரிவு ஆகும்.
பாலகோட் துறையில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள டாபி கிராமத்தில் இருந்து சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் விவரங்களுக்காகக் காத்திருக்கிறோம்''.
இவ்வாறு ரமேஷ் குமார் அங்க்ரல் தெரிவித்தார்.