Last Updated : 27 Dec, 2020 03:14 AM

 

Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் கடன் வலை

இந்தியாவில் இப்போது பணப் பரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது எளிதாகி இருக்கிறது. இப்படி டிஜிட்டல் மயமாகி இருப்பது கடன் பெறும் வசதியையும் எளிதாக்கி உள்ளது. பல்வேறு இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் டிஜிட்டல் கடன் வழங்குகின்றன.

டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் கடன்கள், ‘டிஜிட்டல் கடன்கள்’ என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த வகை கடன்கள், உடனடி கடன்கள், சாஷே கடன்கள் என பலவகையாக வர்ணிக்கப்படுகின்றன. பாரம்பரிய வங்கிகள் போல அதிக கெடுபிடி இல்லாமல், மிக எளிதாக வழங்கப்படுவது டிஜிட்டல் கடன் வசதியின் சாதகமான அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இருண்ட பக்கம்

டிஜிட்டல் கடன் செயலிகள் எளிதாக கடன் கொடுத்து ஈர்த்தாலும், அதன் பிறகு கடன் வலையில் சிக்க வைப்பதாக கூறப்படுகிறது. கடன் தொகையை செலுத்த தவறும் போது அல்லது தாமதமாகும் போது, கடன் வசூலிப்பு பிரதிநிதிகள், கடன் பெற்றவர்களை தொடர்பு கொண்டு மிரட்டத் தொடங்குகின்றனர். அடுத்த கட்டமாக, போன் தொடர்பில் உள்ள நெருக்கமானவர்களை தொடர்பு கொண்டு கடன் விவரத்தை கூறி மோசமாக பேசுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கடன் பெற்றவரை அவமானத்துக்கு உள்ளாக்கி கடனை திரும்பி செலுத்த வைப்பதாகவும், வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்தி வாயிலாகவும் ஏஜென்ட்கள் மிரட்டலில் ஈடுபட்டு அவமானப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து குவியும் புகார்கள் தெரிவிக்கின்றன. பொய்யான நோட்டீஸை அனுப்பியும் மிரட்டுகின்றனர்.

தற்கொலை சோகம்

குறுஞ்செய்தி மூலம் போனை முடக்கும் வைரசை அனுப்பி வைப்போம் என்றும் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த கடன்தாரர் ஒருவர் இப்படி தன் போனுக்கு, வைரஸ் மிரட்டல் வந்த பிறகு நூற்றுக்கணக்கான குப்பை செய்திகள் வந்து குவிந்ததால் மிரண்டு போய் போனை மாற்றி கடன் வாங்கி கடனை அடைத்ததாக கூறியிருக்கிறார். கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதமும் கந்து வட்டி போலவே அதிகமாக இருக்கிறது என்கின்றனர். குறிப்பிட்ட காலத்தில் பணத்தை செலுத்தாத போது, வார அடிப்படையிலும், நாள் அடிப்படையிலும் வட்டி வட்டி மேல் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. தவிர, செயல்முறை கட்டணம், அதன் மீதான ஜிஎஸ்டி என்றும் பணத்தை பிடித்துக் கொள்கின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால், இந்த டிஜிட்டல் கடனை அடைக்க பலரும், வேறு ஒரு டிஜிட்டல் செயலியில் இருந்து கடன் பெறுவதுதான். கடன் வலையில் சிக்கித் தவிப்பவர்கள், மிரட்டல், அவமானத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்வதும் நிகழ்கின்றன. டிஜிட்டல் கடன் செயலிகள் திடீரென பெருகியது எப்படி?

பொதுவாக, உரிய உரிமம் பெற்றிருக்கும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மட்டுமே டிஜிட்டல் கடன் வசதியை வழங்கலாம். வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களின் விநியோகிஸ்தராக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களும் இந்த வசதியை வழங்கலாம். இவற்றில் சில நிறுவனங்கள் தவறான வழிகளைப் பின்பற்றுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, கடந்த ஜூன் மாதம் டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. கடன் ஒப்பந்தங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் அனைத்து டிஜிட்டல் கடன் வசதி நிறுவனங்களின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும் என்பது உட்பட பல நெறிமுறைகளை வெளியிட்டது.

போலி செயலிகள்

ஆனால், கூகுள் பிளே ஸ்டோரில் காணக் கிடைக்கும் டிஜிட்டல் கடன் செயலிகளில் பல வங்கி அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் எவற்றுடனும் எந்த தொடர்பும் இல்லாதவை. டிஜிட்டல் கடன் வசதி மோகத்தை பயன்படுத்தி எளிதாக பணத்தை சுருட்டும் நோக்கத்துடன் இவை செயல்பட்டு வருகின்றன. போலி செயலிகளில் பல சீன தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செயலிகள் தரவுகளை சேகரிப்பது தொடர்பாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

யார் பொறுப்பு?

போலி டிஜிட்டல் கடன் செயலிகள் தொடர்பான புகார்களை அடுத்து, பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் அண்மையில் கூட ஐந்து மோசடி செயலிகளை நீக்கியுள்ளது. எனினும் இந்த நடவடிக்கை போதாது என்று டிஜிட்டல் செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். ரிசர்வ் வங்கியும் தன் பங்குக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

அதே நேரத்தில், போலி செயலிகள் தொடர்பான விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஒரு செயலியை தரவிறக்கம் செய்யும் முன், அந்த செயலியின் உண்மையான தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர். செயலியின் அலுவலக தொடர்பு முகவரி, சக பயனாளிகளின் கருத்து உள்ளிட்ட அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

டிஜிட்டல் கடன் செயலிகளில் பல, கடன்தாரர்களிடம் இருந்து பணம் வசூலிக்க டிஜிட்டல் அவமானத்தை ஒரு வழியாக பயன்படுத்துவது பெரும் சர்ச்சைக்குரியதாக இருப்பதை அறிய முடிகிறது. உண்மையில் டிஜிட்டல் கடன் வசதி என்பது, பாரம்பரிய வங்கி சேவை பெற முடியாதவர்களுக்கும் நிதி சேவை மற்றும் கடன் வசதி அளிக்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாக உருவானது என்பதை மனதில் கொண்டு பார்த்தால், இந்த திசை மாற்றம் வேதனையை அளிப்பதை உணரலாம். ஆக, டிஜிட்டல் கடனால் பாதிக்கப்பட்டவர்களை மட்டும் அல்ல, டிஜிட்டல் கடனையும் மோசடியாளர்களிடம் இருந்து மீட்பது முக்கியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x