

தனது நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானுக்கு 'விங் லூங் 2' என்று பெயரிடப்பட்ட 50 ஆளில்லா தாக்குதல் விமானங்களை வழங்க சீனா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு துருக்கி அரசும் ஆளில்லா தாக்குதல் விமானங்களை வழங்கி வருகிறது.
லிபியா, சிரியா, அஜர்பைஜான் போர்களின் போது சீனா மற்றும் துருக்கி நாடுகளின் ஆளில்லா தாக்குதல் உளவு விமானங்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் பாகிஸ்தான், சீனாவின் ஆளில்லா தாக்குதல் விமானங்களை எதிர்கொள்ள இந்திய பாதுகாப்புத் துறை பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. மத்திய பாதுகாப்புத் துறையின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக ஆளில்லா விமானங்கள் தயாரிப்பில் மும்முரம் காட்டி வருகிறது.
இந்த நிறுவனம் தயாரித்துள்ள ட்ரோன்கள், விமானப் படையின் ஜாகுவார் ரக போர் விமானங்களில் பொருத்தப்பட உள்ளன. ஒரு விமானத்தில் 24 ட்ரோன்கள் பொருத்தப்படும். பாகிஸ்தான், சீனாவுடன் போர் மூண்டால் இந்த ட்ரோன்கள் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதோடு அமெரிக்காவிடம் இருந்து பிரிடேட்டர் ரகத்தை சேர்ந்த ஆளில்லா விமானங்களை வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நட்பின்அடிப்படையில் இந்திய கடற்படைக்கு 2 பிரிடேட்டர் விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட ஹெரோன் ரகத்தை சேர்ந்த ஆளில்லா விமானங்கள் சீன, பாகிஸ்தான் எல்லைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றைமேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டிடம் இருந்து 'ஸ்மாஷ் 2000' என்ற அதிநவீன ட்ரோன் தடுப்பு சாதனங்களை வாங்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் இரவிலும் ட்ரோன்களை துல்லியமாக சுட்டு வீழ்த்த முடியும். முதல் கட்டமாக இந்திய கடற்படை போர்க் கப்பல்களில், 'ஸ்மாஷ் 2000 சாதனங்கள்' பொருத்தப்பட உள்ளன.
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரகத்தை சேர்ந்த 5 ஏவுகணை தடுப்பு சாதனங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அதிநவீன சாதனம் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு கிடைக்கும்.