

வட இந்தியாவில் தற்போது நிலவும் குளிரினால் பயிர்கள் உறைந்து வீணாவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பசுவின் சிறுநீரை நீரில் கலந்து தெளிக்கலாம் என மத்தியபிரதேச மாநில வேளாண் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு வருடம் இறுதியில் வட மாநிலங்களில் கடும் குளிர் பனியுடன் நிலவுவது உண்டு. இதனால், விவசாயிகளின் காய்கறி உள்ளிட்ட பல பயிர்கள் உறைந்து, வீணாகிப் போவதும் வழக்கமாக உள்ளது.
இதை தடுக்க இதன் விவசாயிகள் சல்பரின் ஆசிட்டை நீரில் கலந்து தெளிக்கின்றனர். இதனாலும் அப்பயிர்கள் பல சமயம் காப்பாற்ற முடியாமல் போய் விடுகிறது.
இதற்கு பாஜக ஆளும் ம.பி.யின் சேஹோரிலுள்ள அரசு வேளாண் நிறுவனத்தின் ஆய்வுகளில், பசு மாட்டின் சிறுநீர் பயிர்களுக்கு பலனளிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய அரசின் கிரிஷி விக்யான் கேந்திராவின் வேளாண் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கிரிஷி விக்யான் கேந்திரா வேளாண் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான டாக்டர்.ஜி.எஸ்.கவுசல் கூறியதாவது:
‘‘பசு மாட்டின் சிறுநீரகத்தில் 32 வகையான பயனுள்ள பொருட்கள் கலந்துள்ளன. நைட்ரஜன், யூரிக் ஆசிட், சல்பர், அம்மோனியா, காப்பர், பாஸ்பேட், சோடியம், பொட்டாசியம், மாங்கனீஸ், கால்ஷியம் உள்ளிட்ட இரும்புச் சத்துக்கள் உள்ளன. எனவே, நீரில் இருபது சதவிகிதம் பசு மாட்டின் சிறுநீர் கலந்து பயிர்கள் மீது தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.’’ எனத் தெரிவித்தார்.
மற்றொரு வேளாண் விஞ்ஞானியும், இதே நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநருமான டாக்டர்.ஜே.கே.கனுஜியா கூறும்போது:
‘‘நான் கடந்த வருடங்களாக இயற்கை உரங்கள் இட்டு விவசாயம் செய்கிறேன். இவற்றில் பசு மாட்டின் சிறுநீரகம் தெளிப்பதால் பயிர்களின் ஊட்டம் பெருகுகிறது.
குளிரிலும் உறைவதை தடுக்க பசு மாடிட்ன் சிறுநீர் தெளித்து நிரூபனமாகி உள்ளது. மற்ற காலங்களிலும் இந்த சிறுநீரை பூச்சிக்கொல்லியாகவும் தெளிக்கலாம்.’’ எனத் தெரிவித்தார்.