Published : 26 Dec 2020 03:47 PM
Last Updated : 26 Dec 2020 03:47 PM

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க டெல்லி வந்த 150 ராணுவ வீரர்களுக்கு கரோனா பாதிப்பு

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க டெல்லி வந்து சேர்ந்துள்ள 150 வீரர்களுக்கு கரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசு தின அணிவகுப்பு மற்றும் ராணுவ தின அணிவகுப்புகளில் பங்கேற்க ஆயிரக்கணக்கான வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தலைநகருக்கு வருகின்றனர்.

இந்த ஆண்டும் ஜனவரி 26-ம் குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. ராஜ்பாத்தில் குடியரசுதின அணிவகுப்பை நடத்தும் திட்டங்கள் நோய்த்தொற்றை மீறி நடந்து கொண்டிருக்கின்றன. குடியரசு தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பின் அச்சுறுத்தல் இருந்த போதிலும் இங்கிலாந்து பிரதமர் இந்திய குடியரசு தின விழாவுக்கு வருகை தருவார் என்று வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில் குடியரசு தினம் மற்றும் ராணுவ தின அணிவகுப்புகளில் பங்கேற்க டெல்லிக்குச் சென்ற சுமார் 150 ராணுவ வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

பல்வேறு அணிவகுப்புகளில் பங்கேற்க வந்த வீரர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு முன்பு அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 150 பேருக்கு கோவிட் 19 பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. ஏறக்குறைய அனைத்துமே அறிகுறியற்றவை.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சில ஆயிரம் வீரர்களில் இவர்களும் அடங்குவர். கரோனா பாதிப்புக்குள்ளான 150 ராணுவ வீரர்களும் டெல்லி கன்டோன்மென்ட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அணிவகுப்பை பாதுகாப்பாக நடத்துவதற்கான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x