

இங்கிலாந்திலிருந்து ஒடிசா திரும்பிய 4 வயதுப் பெண் குழந்தைக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கண்டறிந்ததிலிருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள விமானப் பயணிகள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து புவனேஸ்வர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் சுவேந்து சாஹு கூறியதாவது:
''கடந்த 20ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து ஒரு தம்பதியினர் தனது 4 வயதுப் பெண் குழந்தையோடு புவனேஸ்வர் திரும்பியிருந்தனர். அவர்கள் மூவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தைக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
தம்பதியினர் நிலையை மேலும் உறுதிப்படுத்த சனிக்கிழமையன்று கோவிட் -19 சோதனைக்கு மீண்டும் உட்படுத்தப்படுவார்கள். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.
முன்னதாக, இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 34 வயது நபருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
வேகமாகப் பரவும் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு அவருக்கு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த அவரது மாதிரி, புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது''.
இவ்வாறு மாநகராட்சி கூடுதல் ஆணையர் தெரிவித்தார்.
அண்மையில் இங்கிலாந்தில் இருந்து மூன்று பேர் பெர்ஹாம்பூருக்குத் திரும்பியுள்ளது குறித்து கஞ்சம் மாவட்ட ஆட்சியர் வி.ஏ.குலங்கே கூறுகையில், "திரும்பி வந்த மூன்று பேரில் ஒருவரைப் பற்றிய தொடர்புத் தடம் கண்டறியப்பட்டுள்ளது. அவர் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளார். நாங்கள் அவருக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனையை இரண்டு முறை நடத்தியுள்ளோம். முடிவுகள் எதிர்மறையாகக் கண்டறியப்பட்டன. மற்ற இருவருக்கான தொடர்புத் தடமறிதல் நடந்து வருகிறது" என்றார்.