

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 93 சதவீதம் பேர் தானாக முன்வந்து ஆதார் அட்டையைப் பெற்றுள்ளனர் என்று இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக யுஐடிஏஐ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 93 சதவீதம் பேர் தானாக முன்வந்து ஆதார் எண் பெற்றுள்ளனர்.
யுஐடிஏஐ-க்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதம் பேரிடமும், இந்திய ரெஜிஸ்ட்ரர் ஜெனரல் துறைக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் 76 சதவீதம் பேரிடமும் ஆதார் உள்ளது.
தற்போது குழந்தைகளைப் பதிவு செய்வதிலும், எஞ்சியவர்களைப் பதிவு செய்வதிலும் யுஐடிஏஐ கவனம் செலுத்தி வருகிறது. 2010 செப்டம்பர் 29-ம் தேதி முதல் ஆதார் எண் வழங்கப்பட்டது. 5 ஆண்டுகளில் 92.68 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆனால், 2015-ல் மக்கள் தொகை அதிகரித்திருக்கும் என்பதால், சில மாநிலங்களில் மக்கள் தொகையை விட அதிகமாக, அதாவது வயது வந்தோரில் 100 சதவீதத்துக்கும் அதிகமான சதவீதம் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 88 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர்" என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.