

கேரளாவில் 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பதவியேற்க உள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிக எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களை களமிறக்கின. திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது. முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்ட ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆர்யா ராஜேந்திரனை மார்க்சிஸ்ட் கட்சி தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்க உள்ளார். 21 வயதாகும் அவர் நாட்டிலேயே இளம் மேயர் என்ற பெருமையை பெற உள்ளார்.
இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் எல்பிஎஸ் பொறியியல் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் குழந்தைகள் பிரிவான பால சங்கத்தின் கேரள மாநிலத் தலைவராகவும் உள்ளார். கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
திருவனந்தபுரத்தில் ஆர்யா கூறுகையில், ‘‘கட்சி எனக்கு ஒப்படைத்த பணியை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். எனது படிப்பும் அரசியல் பணியும் கைகோத்து செல்லும். படித்துக் கொண்டே அரசியலிலும் ஈடுபடுவேன்’’ என்று தெரிவித்தார்.