பெங்களூரு கப்பன் பூங்காவுக்குள் வாகன போக்குவரத்தை தடை செய்யக் கோரி 5 மாத குழந்தை பொது நல மனு தாக்கல்: கர்நாடக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு கப்பன் பூங்காவுக்குள் வாகன போக்குவரத்தை தடை செய்யக் கோரி 5 மாத குழந்தை பொது நல மனு தாக்கல்: கர்நாடக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பெங்களூரு கப்பன் பூங்காவுக்குள் வாகன போக்குவரத்தை தடை செய்யக்கோரி 5 மாத குழந்தை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த கிரண் மேதி குமார் என்ற 5 மாத குழந்தை சார்பில், அதன் தந்தை ராகேஷ் பிரபல் குமார் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ``பெங்களூரு மாநகருக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்கும் உயிர் மூச்சு மையமாக கப்பன் பூங்கா விளங்குகிறது. கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கப்பன் பூங்காவில் எவ்வித வாகனப் போக்குவரத்தும் இல்லாததால் காற்றில் மாசுபாடு குறைந்து காணப்பட்டது.

ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கப்பன் பூங்காவுக்குள் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூருவில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே காற்று மாசுபாட்டை தடுக்க என் தந்தை ராகேஷ் பிரபல் குமார் உறுப்பினராக இருக்கும் கப்பன் பூங்கா நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் கப்பன் பூங்காவுக்குள் வாகனப் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து கர்நாடக அரசுக்கும் பெங்களூரு மாநகரப் போக்குவரத்து காவல் துறைக்கும் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்'' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் நாகரத்னா, நட்ராஜ் ரங்கசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஞ்சனா தேவ் நாராயணா, ``மனுதாரர் 5 மாத குழந்தையாக இருந்தாலும் காற்று மாசுபாட்டால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார். எனவே இவ்வழக்கை முன்மாதிரியான வழக்காக கருதி, கப்பன் பூங்காவில் வாகனப் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்'' என கோரினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கர்நாடக அரசு, பெங்களூரு மாநகர போக்குவரத்து காவல் ஆணையர், தோட்டக்கலை துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in