கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் வேலூர் மேயர்

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் வேலூர் மேயர்

Published on

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி டி'குன்ஹாவை அவமதித்த வழக்கில் வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். இதை மனுதாரர் ஆட்சேபித்ததால் வழக்கு நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தார். இதை கண்டித்து தமிழகம் முழு வதும் அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹாவை கண்டித்து வேலூர் மாநகராட்சியில் மேயர் கார்த்தியா யினி தலைமையில் கண்டன தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் நீதித்துறையை யும் நீதிபதி குன்ஹாவையும் அவமதித்துவிட்டதாக பெங்களூரு வைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெய்குமார் ஹிரேமட் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கார்த்தியாயினிக்கு அழைப்பாணை அனுப்பியது.

இந்நிலையில் இவ்வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பில்லப்பா, பனீந்தரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி நேரில் ஆஜராகி, ''நீதிபதி குன்ஹாவை அவமதித்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி நீதிபதி குன்ஹாவிடம் கடிதம் வாயிலாகவும் ஊடகங்கள் மூலமாகவும் மன்னிப்பு கோரி யுள்ளேன்.

அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் என்னை வழக்கில் இருந்து விடு வித்தது. அதேபோல கர்நாடக உயர் நீதிமன்றமும் என்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்''எனக் கோரி, சத்திய பிரமாணத்தையும் தாக்கல் செய்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தர்மபால், ''வேலூர் மேயர் கார்த்தியாயினி தமது பொறுப்பை உணராமல் நீதித்துறைக்கும் நீதிபதிக்கும் கள‌ங்கம் விளைவித்துவிட்டார். அவரது மன்னிப்பை ஏற்பது ஏற்கத் தக்கது அல்ல‌''என ஆட்சேபித்தார்.

இதையடுத்து நீதிபதி பில்லப்பா, மனுதாரர் தரப்பில் உரிய ஆட்சேப மனுவை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in