

கரோனாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காமல் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட்டு காலத்தை விரயமாக்குவதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முரளிதரன் கடுமையாக சாடியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்து, அவற்றுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட ஆளுநரிடம் 2-வதுமுறையாக கேரள அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்து, அவற்றுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரை 23-ம் தேதி கூட்ட ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆரிப் முகமது கான் அமைச்சரவையின் பரிந்துரையை மறுத்துவிட்டார்.
ஆளுநர் ஆரிப் முகமது கான் செயலுக்கு ஆளும் மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் தீர்மானம் நிறைவேற்றி கேரள அரசு ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
''வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசித்து, அதைத் திரும்பப் பெற கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவை சிறப்பு ஒருநாள் கூட்டத்தைக் கூட்டக் கோரி அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது.’’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
ஆளுநர் ஆரிப் முகமது கான் சட்டப்பேரவையைக் கூட்ட மறுத்துவிட்டதை பாஜக வரவேற்றுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முரளிதரன் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் வழங்கப்பட்ட சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நாடுமுழுவதும் உள்ள கரோனா பாதிப்பு சராசரியை விடவும் கேரளாவில் அதிக பாதிப்பு உள்ளது. கேரளாவில் கரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தேவையற்ற பிரச்சினைகளை மாநில அரசு கையில் எடுத்துக் கொண்டு நேரத்தை விரயமாக்குகிறது. விவசாயிகள் போராட்டம் கேரளாவுக்கு எந்த தொடர்பும் கிடையாது. இதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் கேரள அரசுக்கு என்ன உள்ளது.’’ எனக் கூறினார்.