

"தாத்ரியில் நடந்தது போன்ற சம்பவங்கள் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் பங்கம் விளைவிக்கும். பிரதமரின் தொலைதூரப் பார்வையை சிதைப்பதாக இத்தகைய சம்பவங்கள் உள்ளன" என மத்திய அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ள்ளார்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் மனோகர் பரிக்கர். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "தாத்ரி சம்பவத்தில் பிரதமர் மவுனம் காப்பதாக நேரடியாக பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
உண்மையில், தாத்ரியில் நடந்தது போன்ற சம்பவங்கள் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் பங்கம் விளைவிக்கும். பிரதமரின் தொலைதூரப் பார்வையை சிதைப்பதாக இத்தகைய சம்பவங்கள் உள்ளன. எனவே இத்தகைய சம்பவங்களால் கட்சிக்கும், கூட்டணிக்கும் எந்த நன்மையும் இல்லை.
அதேவேளையில் சில சம்பவங்கள் நடந்த உண்மைக்கு மாறாக திரித்துக் கூறப்படுகின்றன. நான் எந்த ஒரு தனிப்பட்ட சம்பவத்தை தொடர்புபடுத்தியும் இக்கருத்தை கூறவில்லை. ஒரு சில அரசியல்வாதிகள் சில பிரச்சினைகளை தேசிய பிரச்சினையாக மாற்ற வேண்டும் என்று நினைப்பதால் அவை அவ்வாறாக மாற்றப்படுகின்றன" என்றார்.
அண்மைகால மத வன்முறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள் தொடர்புபடுத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பரிக்கர், "நான் எனது சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டனாக இருக்கிறேன். வன்முறை எந்த வடிவில் இருந்தாலும் அது ஏற்பதற்கில்லை என்பதே எனது கொள்கை. அதுவே நான் வழிவந்த ஆர்.எஸ்.எஸ்., சங்க பரிவார் அமைப்புகளின் கொள்கைகளும்கூட. எனவே இத்தகைய குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல" என்றார்.
மாட்டிறைச்சி தடை விவகாரம் குறித்த கேள்விக்கு, "மாட்டிறைச்சி தடை விவகாரம் பல்வேறு கோணங்களில் அணுகப்படவேண்டியது. இப்பிரச்சினையில் பின்னிப் பிணைந்திருக்கும் உணர்வுகள், சுகாதார பிரச்சினைகள், விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை என பல்வேறு பிரச்சினைகளையும் ஆராய்ந்து முடிவெடுக்கப்பட வேண்டும். இப்பிரச்சினையில் அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.