

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்து, அவற்றுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட ஆளுநரிடம் 2-வதுமுறையாக கேரள அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்து, அவற்றுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரை 23-ம் தேதி (நேற்று) கூட்ட ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆரிப் முகமது கான் அமைச்சரவையின் பரிந்துரையை மறுத்துவிட்டார்.
ஆளுநர் ஆரிப் முகமது கான் செயலுக்கு ஆளும் மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று நிருபர்களுக்கு திருவனந்தபுரத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசித்து, அதைத் திரும்பப் பெற கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவை சிறப்பு ஒருநாள் கூட்டத்தைக் கூட்டக் கோரி அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது. அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் கூட்டத்தொடரைக் கூட்டுவார் என நம்புகிறேன்.
நம் நாட்டில் உள்ள நாடாளுமன்ற அமைப்பு முறையின்படி, பெரும்பான்மையான அரசு எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது வழக்கம். தேசிய அளவில் விவசாயிகளும், வேளாண் துறையும் சிக்கலான நிலையை எதிர்கொண்டுள்ளன.
எங்களைப் பொறுத்தவரை உணவு உள்ளிட்ட தானியங்களுக்கு பிற மாநிலங்களைத்தான் சார்ந்திருக்கிறோம். ஆதலால், மற்ற மாநிலங்களில் விவசாயிகள் பாதிக்கப்படும்போது, அது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது.
நாட்டின், மாநிலத்தின் பொதுநலன் கருதி, வேளாண் சட்டங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிப்பதுதான் முறையாகும். ஆதலால், ஒருநாள் பேரவைக் கூட்டத்தை ஆளுநர் கூட்டுவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார், ஆளுநரின் செயல் ஜனநாயக விரோதமானது என்றும், காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ஆளுநரின் செயல் ஜனநாயக மதிப்புகளுக்கு விரோதமானது எனக் கண்டித்திருந்தார்.
ஆனால், ஆளுநர் ஆரிப் முகமது கான் சட்டப்பேரவையைக் கூட்ட மறுத்துவிட்டதை பாஜக வரவேற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் வழங்கப்பட்ட சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என பாஜக விமர்சித்துள்ளது.