

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் அசாம் மற்றும் மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமித் ஷா தனது இரண்டு நாள் பயணத்தின்போது கவுகாத்தி, சுராச்சந்த்பூர் நகரங்கள் உள்ளிட்ட அசாம், மணிப்பூர் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட உள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
''உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இரண்டு நாள் பயணத்தின்போது கவுகாத்தியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், மாநிலத்தில் உள்ள நம்கார் எனப்படும் 8,000 வைணவ மடங்களுக்கு அசாம் தரிசன திட்டத்தின் ஒருபகுதியாக நிதி மானியங்களை விநியோகிப்பார்.
கவுகாத்தியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி தவிர, நகரத்தின் இரண்டாவது மருத்துவக் கல்லூரி மற்றும் அசாம் முழுவதும் அமைக்கப்படவுள்ள ஒன்பது சட்டக் கல்லூரிகளுக்கும் அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறார்.
அசாமில் நம்கார்களுக்கு நிதி மானியங்களை விநியோகிப்பதைத் தவிர, ஒரு கலாச்சார மற்றும் சுற்றுலாத் தலமாக படாத்ரவாவை மேம்படுத்துவதற்கான அடித்தளத்தையும் அமித் ஷா அமைக்க உள்ளார்.
மணிப்பூரில், சுராச்சந்த்பூர் மருத்துவக் கல்லூரியின் அடிக்கல் நாட்டுதல், முவோங்கொங்கில் ஐஐடி, மாநில அரசு விருந்தினர் மாளிகை, மாநிலக் காவல் தலைமையகம் மற்றும் இம்பாலில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
கவுகாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் கலந்து கொள்வார். இம்பாலில் நடைபெறும் நிகழ்வுகளில் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் கலந்துகொள்வார்''.
இவ்வாறு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.