இங்கிலாந்திலிருந்து டெல்லி திரும்பிய பெண்ணுக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து ஆந்திரா தப்பிச் சென்றார்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

இங்கிலாந்திலிருந்து டெல்லி திரும்பியவருக்கு கோவிட்-19 உறுதியாகியுள்ள நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து ஆந்திரா தப்பிச் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

''ஆங்கிலோ இந்தியப் பெண் ஒருவர் டிசம்பர் 21ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து டெல்லிக்கு வந்தார். மருத்துவர்கள் உடனே அவருடைய ரத்த மாதிரிகளைச் சேகரித்தனர். பின்னர் அவற்றைக் கரோனா பரிசோதனை செய்வதற்காக அனுப்பிவிட்டு அப்பெண் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் மையத்திலிருந்து தப்பித்து சிறப்பு ரயிலில் ஆந்திராவின் ராஜமுந்திரியை அடைந்தார்.

அந்தப் பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், ஆந்திர மாநிலச் சுகாதாரத் துறைக்கும், காவல்துறைக்கும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

புதன்கிழமை இரவு அப்பெண் கண்டுபிடிக்கப்பட்டு ராஜமுந்திரியில் உள்ள தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் புனேவின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கு (என்.ஐ.வி) அனுப்பப்பட்டன.

அந்தப் பெண் பழைய அல்லது உருமாறிய கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த, என்.ஐ.வி.யின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்''.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in