

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று டெல்லி புறப்படுகின்றனர் என கிசான் சேனா தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மதுரா, ஆக்ரா, பெரோஷாபாத், ஹத்ராஸ், மீரட், முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கிசான் சேனா ஆதரவாளர்கள் இன்று புறப்பட்டு டெல்லி செல்லும் வழியில் பிரஜா பகுதியில் இணைகின்றனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக கடும் பனியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கும், மத்திய அ ரசுக்கும் இடையே 5 சுற்றுப் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் 6-வது சுற்றுப் பேச்சு நடத்த மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தின் ஒரு பிரிவினர் மத்திய அரசுடன் பேசி வருகின்றனர். அதில் முக்கியமாக கிசான் சேனா அமைப்பின் ஆதரவாளர்கள் வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக இன்று டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.
கிசான் சேனா நிறுவனர் தாக்கூர் கவுரி சங்கர் சிங் நிருபர்களிடம் கூறுகையில்” டெல்லிக்கு செல்லும் எங்கள் போராட்டத்துக்கு அனுமதி கோரி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை சந்திக்க உள்ளோம்.
மத்திய அமைச்சரைச் சந்தித்து, டெல்லியில் நடந்து வரும் பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் சங்கத்தினரின் போராட்டத்தில் சமரசம் ஏதும் செய்ய வேண்டாம். அவர்கள் நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் அல்ல, உ.பி.உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அல்ல என்று தெரிவிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.