

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தலித்து களுக்கு முடி வெட்டக் கூடாது, சவரம் செய்யக் கூடாது என ஆதிக்க சாதியினர் சலூன் கடைக்காரர் களை மிரட்டியுள்ளனர். இதை மீறி தலித்துகளுக்கு முடிவெட்டிய 5 சலூன் கடைக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தின் பெல்லாரி மாவட் டம், தாலூர் பகுதியில் சாதி பாகு பாடு, தீண்டாமை உள்ளிட்ட கொடுமை கள் இன்னமும் தொடர்கின்றன. தாலூரில் தலித்துகள் சலூன் கடைக ளில் சுழல் நாற்காலியில் அமர்ந்து முடி திருத்திக்கொள்ளவோ, சவரம் செய்துகொள்ளவோ அனுமதி யில்லை. மரத்தடியிலோ, ஒதுக்குப் புறமாகவோ அமர்ந்துதான் முடி வெட்டிக்கொள்ள வேண்டும். தலித் துகளுக்கு பயன்படுத்திய கத்தி, கத்தரிக்கோல் போன்ற உபகரணங் களை சாதி இந்துக்களுக்கு பயன் படுத்தக் கூடாது. மீறினால் ஊர் பஞ்சாயத்தால் கடும் தண்டனை வழங் கப்படுவது காலங்காலமாக உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
தாலூரில் தற்போது 5 சலூன் கடை கள் உள்ளன. கடந்த சில வாரங் களுக்கு முன் இங்கு வந்த ஆதிக்க சாதியினர், “தலித்துகளுக்கு நீங்கள் முடி வெட்டவோ, சவரம் செய் யவோ கூடாது. மீறினால் உங்கள் கடை யும் இருக்காது. உங்கள் கையும் இருக்காது” என்று மிரட்டியதாக மஞ்சு நாத் என்ற முடி திருத்தும் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மிரட்டலை மீறி 5 சலூன் கடைக்காரர்களும் தலித்துகளுக்கு தொடர்ந்தி முடி திருத்தி வந்துள்ளனர். இதையறிந்த ஆதிக்க சாதியினர் கடந்த சில தினங்களுக்கு முன் 5 சலூன் கடைகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்கின்றனர்.
தொடர்ந்து ஆதிக்க சாதியினர், “தலித்துகள் முடிவெட்டிய கடையில் இனி முடிவெட்ட மாட்டோம்” என தங்களுடைய சாதி சங்கங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை தீர்மானமும் போட்டதாக தெரிகிறது. “அன்று முதல் ஆதிக்க சாதியினர் யாரும் எங்கள் கடைகளுக்கு வருவதில்லை. பக்கத்து ஊருக்குச் செல்கின்றனர். இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது” என்று சலூன் கடைக்காரர்கள் சார்பில் மாநில சமூகநலத் துறையில் கடந்த புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக உடனே விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா உத்தரவிட்டார். இதையடுத்து தாலூரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சலூன் கடைக்காரர்கள் மிரட்டப் பட்டதும், தாக்கப்பட்டதும் உண்மை தான் என சமூக நலத்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்பித்தனர்.
இதையடுத்து 5 சலூன் கடைக் காரர்களையும் வெள்ளிக்கிழமை பெங்களூருக்கு வரவழைத்த அமைச்சர் ஆஞ்சநேயா, “ஆதிக்க சாதியினர் புறக்கணிப்பால் நஷ்டம் அடைந்த 7 முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கினார். மேலும் தலித்துகளுக்கு தொடர்ந்து முடித்திருத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சலூன் கடைக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பெல்லாரி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.