சந்தனக் கடத்தல் வீரப்பனால் கவரப்பட்டு உ.பி.யில் கொள்ளைக் கூட்டம் அமைத்த இளைஞர் கைது

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கவரப்பட்டு உ.பி.யில் கொள்ளைக் கூட்டம் அமைத்த இளைஞர் கைது
Updated on
1 min read

தமிழகத்தின் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கவரப்பட்டு உத்தரப்பிரதேசத்தில் கொள்ளை கூட்டம் அமைத்தவர் கைதாகி உள்ளார். ஆசிப் எனும் இவர் தனது பெயரையும் ’உபி வீரப்பன்’ என மாற்றிக் கொண்டிருந்தார்.

உ.பி.யின் மேற்குப் பகுதியின் பரேலியிலுள்ள சத்யபிரகாஷ் பூங்கா முன் நேற்று இரவு போலீஸாரின் வழக்கமான சோதனை நடைபெற்றது. அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் சிக்கினர்.

இவர்களை காவல் நிலையத்தில் வைத்து சோதனை நடத்திய போது அவர்களிடம் விலை உயர்ந்த 8 கைப்பேசிகள் கிடைத்துள்ளன. ஒவ்வொருவர் பையிலும் தலா இரண்டு லேப்டாப்புகளும் கிடைத்தன.

இதையடுத்து நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் மிகப்பெரிய கொள்ளைக் கும்பலை நடத்தி வந்துள்ளனர். இவர்களின் ஒருவரான ஆசிப்(39) அக்கும்பலின் தலைவரான இருந்துள்ளார்.

தனது பெயரை வீரப்பன் என மாற்றி இக்கொள்ளைக் கும்பலை நடத்தி வந்துள்ளார். மற்றவரான சலீம்(29), விரப்பனுக்கு உதவியாக இருந்துள்ளார். இவர்களது கும்பலின் மேலும் 12 பேரை பரேலி போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த உபி வீரப்பனிடம் இரண்டு கைத்துப்பாக்கி மற்றும் அதற்கானக் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் பல கள்ளத்துப்பாக்கிகளையும் இந்த உபி வீரப்பன் காட்டுப்பகுதியில் ஒளித்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த உபி வீரப்பன் கொள்ளைக் கும்பலின் மீது பரேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தின் நகரங்களான பதாயூ, முராதாபாத் ஆகியவற்றிலும் கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆசிப் ஒரு உபி வீரப்பனாக மாறிய தகவல் கிடைத்தன

இது குறித்து பரேலியின் நகரக் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சைனி சவுத்ரி கூறும்போது, ‘தமிழக போலீஸிடமும் சிக்காமல் வீரப்பன் பல வருடங்களாக சவாலாக இருந்ததை தனது இளம் வயதில் செய்திகளில் ஆசிப் படித்துள்ளான்.

இதனால், அவர் மீது கவரப்பட்டு தனது பெயரையும் உ.பி. வீரப்பன் என மாற்றி பெரிய கொள்ளைக்காரனாக விரும்பியுள்ளான். எதிர்காலத்தில் தானும் உபி போலீஸாருக்கு பெரும் சவாலாகி செய்திகளில் பிரபலாக விரும்பினான்.

தன்னை போலீஸார் பிடிக்க வரும் போது வீரப்பன் கர்நாடாகாவிற்கு தப்பியதை போல், அருகிலுள்ள உத்தராகண்டின் காடுகளில் ஒளிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.’ எனத் தெரிவித்தார்.

வீரப்பன் பற்றி வெளியான தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழித் திரைப்படங்களையும் ஆசிப் யுடியூப்களில் பார்த்து ரசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். வீரப்பனின் ரசிகராகி அவரை போல் ஒரு கொள்ளைக் கும்பலை அமர்த்தியவர் ஆறு மாதங்களில் சிக்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in