திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்த மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாஜக எம்.பி. சவுமித்ரா கான்

திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்த சுஜாதா. உடன் திரிணமூல் எம்.பி. சுகதா ராய், மூத்த தலைவர் குணால் கோஷ் உள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்த சுஜாதா. உடன் திரிணமூல் எம்.பி. சுகதா ராய், மூத்த தலைவர் குணால் கோஷ் உள்ளனர்.
Updated on
1 min read

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி பாஜக எம்.பி. சவுமித்ரா கான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இருவருக்கும் இடையே பலவிதமான பிரச்சினைகள் இருந்து வந்ததால், பரஸ்பர ஒப்புதலுடன் பிரியக் கோரி பாஜக எம்.பி. நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள பிஸ்னுபூர் தொகுதி பாஜக எம்.பி. சவுமித்ரா கான். இவரின் மனைவி சுஜாதா மன்டோல் கான். கடந்த 10 ஆண்டுகளாக தன்னை விவாகரத்துச் செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார் என்று குற்றஞ்சாட்டிய சுஜாரா, கடந்த சில நாட்களுக்கு முன், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

கட்சியில் விசுவாசமாக இருப்பவர்களுக்குப் பதிலாக தகுதியற்றவர்களுக்கும், ஊழல்கறை படிந்த தலைவர்களுக்கும்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று சுஜாதா குற்றஞ்சாட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்.பி. சவுமித்ரா கான் நேற்றுமுன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “நான் எனது மனைவி சுஜாதாவை விவாகரத்து செய்யப்போகிறேன். இனிமேல் கான் என்ற அடைமொழிைய அவர் சேர்க்க வேண்டாம்.

சவுமித்ரா கான் மனைவி என எங்கும் கூற வேண்டாம். உங்களுக்கு அனைத்து வகையான சுதந்திரமும் அளித்தேன். கடந்த 2019-ம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தபின் உங்கள் பெற்றோரை தாக்கிய கட்சியில் சேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள் “ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சவுமித்ரா கான் தனது மனைவிக்கு நேற்று முறைப்படி விவாகரத்து நோட்டீஸையும் அனுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in