கெய்ன் எனர்ஜிக்கு எதிரான வரிவிதிப்பு வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு தோல்வி: ரூ.8 ஆயிரம் கோடி செலுத்த உத்தரவு

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read


இந்திய அரசு விதித்த பின்தேதியிட்ட வரிவிதிப்புக்கு எதிராக பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனமான கெய்ன் எனர்ஜி சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அந்த நிறுவனம் வென்றுள்ளது. கெய்ன் நிறுவனத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.8ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே வோடஃபோன் நிறுவனத்துக்கும், இந்திய அரசுக்கும் இடையிலான கடந்த காலத்துக்கும் சேர்த்து வரிவிதிக்கும் ரெட்ரோஸ்பெக்டிவ் வரிவிதிப்புதான், கெய்ன்-இந்திய அரசுக்கும் இடையிலான பிரச்சினைக்கும் காரணமாகும்.

கடந்த 2006-07ம் ஆண்டு பிரி்ட்டனைச் சேர்ந்த கெய்ன் நிறுவனம் தன்னுடைய பங்குகளை இந்தியாவில் உள்ள கெய்ன் நிறுவனத்துக்கு மாற்றியது. ஆனால், இந்த பங்குகளை மாற்றிய வகையில் முதலீட்டு ஆதாயத்தை கெய்ன் இந்தியா அடைந்துள்ளதாக்க கூறி அந்த நிறுவனத்துக்கு ரூ.10,247 கோடி வரிவிதித்து வருமானவரித்துறை.

ஆனால், இந்த வரியை செலுத்த கெய்ன் நிறுவனம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து வருமானவரி மேல்முறையீடு தீர்ப்பாயத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் கெய்ன் நிறுவனம் முறையீடு செய்தது. ஆனால், அந்த வழக்கில் கெய்ன் நிறுவனம் தோல்வி அடைந்தது.

இதனால் வேறு வழியின்றி, கடந்த 2011-ம் ஆண்டு கெய்ன் நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது பெரும்பான்மையான பங்குகளை, வர்த்தகத்தை வேதாந்தா நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. கெய்ன் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய வருமானவரித்துறை அனுமதிக்கவில்லை. மேலும், கெய்ன் இந்தியாவின் பங்குகளை முடக்கியும், அதன் ஈவுத்தொகையை முடக்கி வைத்தனர்.

இந்திய அரசின் செயலை எதிர்த்து, தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் கெய்ன் நிறுவனம் முறையீடு செய்தது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பில், “ கெய்ன் நிறுவனத்துக்குரிய விவகாரம் வரிப் பிரச்சினை அல்ல இது முதலீடு தொடர்பான விவகாரம். முந்தைய விவகாரங்களுக்கு சேர்த்து ரூ.10,274 கோடி வரிவிதிக்கும்இந்திய அரசின் கோரிக்கை என்பது, நியாயமான மற்றும் சமமாக நடத்தும் உறுதியை மீறுவதாகும்.

ஆதலால் கெய்ன் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.8 ஆயிரம் கோடியை இந்திய அரசு வழங்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் வட்டி, செலுத்தப்பட்ட வரியை திருப்பி அளிக்க வேண்டும்,முடக்கிவைக்கப்பட்ட பங்குகளையும் விடுவிக்க வேண்டும் ” எனத் தெரிவித்தது.

கடந்த 3 மாதங்களில் இந்திய அரசுக்கு கிடைத்த 2-வது பின்னடைவாகும். வோடஃபோன் நிறுவனம் மீது விதிக்கப்பட்ட பின்தேதியிட்ட விரிவிதிப்பு ரத்து செய்து கடந்த செப்டம்பர் மாதம் இந்திய அரசுக்கு சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 2-வதாக தற்போது கெய்ன் நிறுவனமும் ரெட்ரோஸ்பெக்டிவ் வரிவிதிப்பில் வென்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in