

குஜராத்தில் உள்ள சோமாநாதர் கோயிலில் தங்க கோபுர பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
குஜராத் மாநிலத்தின் கிர்சோம்நாத் மாவட்டம், பிரபாச பட்டினக் கடற்கரையில் பிரசித்தி பெற்ற சோமநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சிவனின் 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் இது முதன்மையானதாக நம்பப்படுகிறது. குஜராத் மாநிலத்தின் முக்கிய ஆன்மீக மற்றும் சுற்றுலா தலமாக இது விளங்குகிறது.
இக்கோயில் கோபுரத்தில் 1400-க்கும் மேற்பட்ட கலசங்கள் உள்ளன. இந்தக் கலசங்களுக்கு தங்கத் தகடு பொருத்தும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிவுக்கு வந்து இக் கோபுரம் தங்க கோபுரமாக ஜொலிக்க உள்ளது.
இதுகுறித்து சோமநாதர் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஆர்.கே.லஹேரி கூறும்போது, “கோயிலில் உள்ள 1400-க்கும் மேற்பட்ட கலசங்களுக்கு தங்கத் தகடு பொருத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம். இதற்காக இதுவரை சுமார் 500 பேர் நன்கொடை வழங்கியுள்ளனர்.
வரும் 2021 மார்ச் மாதம் இப்பணிகள் நிறைவு பெறும் என நம்புகிறோம். கோயிலில் புதிய மின்விளக்கு வசதிகளும் செய்து வருகிறோம். இதன் மூலம் பக்தர்கள் இரவிலும் தங்கக் கலச கோபுரத்தை கண்டுகளிக்க முடியும். உலகம் முழுவதிலும் இருந்து இக்கோயிலுக்கு 10 ஆயிரம் பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது” என்றார்.