

பிரிட்டனில் மிகவேகமாகப் பரவும் புதிய வகை கரோனா வைரஸ் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இந்த வகை வைரஸ் இந்தியாவில் இதுவரை காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் கரோனா வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டு புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வேகமாகப் பரவினாலும் உயிரிழப்பு ஆபத்து குறைவாகவே உள்ளது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.
பிரிட்டன் உடனான ரயில், கப்பல், விமானப் போக்குவரத்தை ஐரோப்பிய நாடுகள் உட்பட 25-க்கும் மேற்பட்ட நாடுகள் ரத்து செய்துள்ளன. இதில் இந்தியாவும் இணைந்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
பிரிட்டனில் இருந்து அனைத்து விமானங்களுக்கும் இன்று இரவு முதல் டிசம்பர் 31 வரை மத்திய அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதுவரை இந்தியா வரும் அனைத்து பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை (எஸ்ஓபி) மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை அறிவித்தது.
இதன்படி இந்தியா வரும் அனைத்து பயணிகளும் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதில் அவர்களுக்கு கரோனா தொற்று இருந்தால், புதிய கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை அடுத்து மேற்கொள்ளப்படும். புதிய கரோனா தொற்று இருப்பவர்கள் தனியே தனிமைப்படுத்தப் படுவார்கள். அவருடன் இருந்த பயணிகள் மருத்துவ முகாம்களில் தனிமைப்படுத்தப் படுவார்கள்.
பழைய தொற்று மட்டுமே இருப்பவர்களுக்கு, பாதிப்பின் தன்மையைப் பொறுத்து தற்போதுள்ள விதிகளைப் பின்பற்றி சிகிச்சை அளிக்கப்படும்.
பிரிட்டனில் இருந்து அல்லது பிரிட்டன் வழியாக கடந்த 4 வாரங்களில் (நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை) இந்தியா வந்த அனைத்து பயணிகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். இந்தப் பயணிகள் கடந்த 14 நாட்களில் தாங்கள் எங்கெங்கு பயணம் செய்தோம் என்ற விவரத்தை அளிக்க வேண்டும்.
இது தொடர்பான சுய விளக்க படிவத்தை அவர்கள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். கடந்த 4 வாரங்களில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகளின் விவரத்தை மாநில அரசுகளிடம் குடியேற்றத் துறை அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிட்டனில் 17 மாற்றங்கள் அல்லது பிறழ்வுகளுடன் இந்த வைரஸ் தோன்றியுள்ளது. இது மக்களிடம் எளிதாக பரவக் கூடியது என்று கூறப்பட்டுள்ளது.
8 பயணிகளுக்கு கரோனா
இதனிடையே லண்டனில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெவ்வேறு விமானங்களில் இந்தியா வந்த 8 பயணிகளுக்கு கரோனா தொற்று இருந்தது. எனினும், நேற்று காலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் டெல்லி வந்த பயணிக்கு கரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.
இந்நிலையில் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் நேற்று கூறும்போது, “பிரிட்டனில் வேகமாகப் பரவும் புதிய வகை கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை காணப்படவில்லை. பிற நாடுகளில் கிடைக்கும் மற்றும் நம் நாட்டில் உருவாக்கப்படும் தடுப்பூசிகளின் திறனில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்றார்.