Last Updated : 14 Oct, 2015 05:18 PM

 

Published : 14 Oct 2015 05:18 PM
Last Updated : 14 Oct 2015 05:18 PM

1962-ம் ஆண்டு இந்திய-சீன போரின் போது அமெரிக்க உதவியை நாடிய ஜவஹர்லால் நேரு: புத்தகத்தில் தகவல்

முன்னாள் சிஐஏ அதிகாரியான புரூஸ் ரீடெல் எழுதியுள்ள புதிய புத்தகத்தில் "இந்தியாவைத் தாக்க மாவோ எடுத்த முடிவு, நேருவை அவமானப்படுத்தவே" என்று கூறியுள்ளார்.

'JFK’s Forgotten Crisis: Tibet, the CIA and the Sino-Indian War' என்ற அந்த நூலில், சீனாவின் தாக்குதலை முறியடிக்க அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அமெரிக்க உதவியை நாடியதாக தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளின் தலைவராக நேரு எழுச்சி பெறும் நிலையைக் கண்ட மாவோ, நேருவை அவமானப்படுத்தவே இந்தியாவைத் தாக்கும் முடிவை எடுத்தார் என்கிறார் புரூஸ் ரீடெல்.

“மாவோவின் கவனம் நேரு மீது இருந்தது. ஆனால் இந்தியாவின் தோல்வி மாவோவின் இரண்டு மிகப்பெரிய விரோதிகளான குருஷ்சேவ் மற்றும் கென்னடிக்கு பின்னடைவு என்று கருதினார்” என்று எழுதியுள்ளார் ரீடெல்.

கடும் சேதம்

இந்தியா மிக வேகமாக சீனாவிடம் தங்களது பிரதேசத்தை இழந்து வந்தது. மேலும் பலி எண்ணிக்கையும் அதிகம். இந்நிலையில் நவம்பர் 1962-ல் நேரு, கென்னடிக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்காவிடமிருந்து ஜெட் போர் விமானங்களைக் கேட்டிருந்தார். அதாவது, “நம் நட்பு நாடுகளிடமிருந்து நிறைய முயற்சிகள் தேவைப்படுகிறது” என்று நேரு எழுதினார்.

ஆனால், இதற்கு அடுத்த கடிதம் நேருவின் பதட்டத்தை வெளிப்படுத்தியது, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நேரடியாக கென்னடியிடம் கொடுத்த கடிதம் அது.

'வான் வழித் தாக்குதலில் இணைய அழைப்பு'

"சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தை முறியடிக்க வான் வழிப் போருக்கு அமெரிக்கா உதவியை நாடினார் நேரு. இது இந்தியப் பிரதமர் வைத்த மிகமுக்கியமான கோரிக்கையாகும். அதாவது கொரியாவில் சீன படைகளுடன் அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டதற்கு 10 ஆண்டுகள் கழித்து இந்தியா, அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியை சீனாவுடனான புதிய போருக்கு அழைத்தது” என்று எழுதுகிறார் ரீடெல்.

இந்நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஜே.கே.கால்ப்ரெய்த் வெள்ளை மாளிகைக்கு தந்தி அனுப்பினார். அதாவது நேருவிடமிருந்து இத்தகைய கோரிக்கை வரும் என்று அவர் முன் கூட்டியே அமெரிக்காவுக்கு தெரியப் படுத்தினார்.

“அனைத்து தட்பவெப்பத்திலும் போரிடக்கூடிய திறனுடைய சூப்பர் சானிக் அமெரிக்க விமானப்படைகள் 12 வேண்டும். எங்களிடம் நவீன ராடார் வசதி இல்லை. எனவே அமெரிக்கா இந்த சூப்பர்சானிக் விமானங்களை இயக்கும் ஆட்களுடன் அனுப்ப வேண்டும் என்றும், ராடார் நிர்மாணமும் தேவை என்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு இதில் பயிற்சியும் அளிக்க வேண்டும்” என்று நேரு எழுதியதை ரீடெல் தனது நூலில் மேற்கோள் காட்டியுள்ளார்.

திபெத்தில் தாக்குதல் நடத்த பி-47 ரக குண்டுகளையும் நேரு கேட்டிருந்தார்.

ஆனால் இந்தக் கடிதத்தில் குண்டுகள் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட மாட்டாது என்று நேரு கென்னடிக்கு தன் கடிதத்தில் உறுதி அளித்ததையும் அவர் குறிப்பிட்டார்.

“வெறும் இந்திய நாட்டின் இருப்பு மட்டுமல்ல, ஆசியாவில் உள்ள சுதந்திர அரசுகளின் இருப்புக்கே சீனாவை முறியடிப்பது அவசியம் என்றும் நேரு கருதினார்.

350 போர் விமானங்கள், 24 ஜெட்கள், குண்டுவீச்சுப் படைகள் என்று நேரு கேட்டிருந்தார். ஆனால் குறைந்தது இவற்றை இயக்க 10,000 நபர்களாவது தேவைப்படும்.

அமெரிக்காவிடம் மட்டுமல்ல, பிரிட்டனிடமும் நேரு கோரிக்கை வைத்தார்.

அமெரிக்க, பிரிட்டன் ஆதரவை நினைத்து அஞ்சிய சீனா

சீனப் படைகள் பயங்கரமாக முன்னேறிய நிலையில், வட-கிழக்கு பகுதிகள் முழுதையும் பிடித்து விடும் நிலையில் சீனா இருந்தது. கொல்கத்தா வரை அது எட்டும் அபாயமும் இருந்தது. ஆனால் பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு உதவும் நிலையில் இருந்ததைக் கண்ட சீனா ஏகமனதாக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஆனால், போர் தொடர்ந்திருந்தால் அமெரிக்கா என்ன விதமான ஆதரவை அளித்திருக்கும் என்பது தெரியவில்லை என்கிறார் ரீடெல்.

சீனாவை கட்டுப்படுத்தாத ரஷ்யா:

குருஷ்சேவுக்கு நேருவுடன் நல்ல நட்பு முறை இருந்தும், கியூபாவில் தங்களது நலன்களுக்காக இருந்த ரஷ்யா, சீனாவை இந்தியா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவில்லை.

1959-ல் ஜான் கென்னடி தனது செனேட் உரையில் ஆசியாவில் கம்யூனிஸ்ட் சீனாவா, ஜனநாயக இந்தியாவா? ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார் என்ற ரீதியில் கேள்வி ஒன்றை எழுப்ப, அதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியா மீதான தாக்குதலை சீனா தொடுத்திருக்கலாம் என்று ரீடெல் கூறுகிறார்.

மேலும், சீனாவின் இந்தியா மீதான போரை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்கா பாகிஸ்தானை அறிவுறுத்தியதாகவும் ரீடெல் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

புரூஸ் ரீடெல் தெற்காசிய விவகார நிபுணர் என்று கருதப்படுபவர். பராக் ஒபாமா உட்பட அமெரிக்க அதிபர்களுக்கு ஆலோசகராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x