Last Updated : 22 Dec, 2020 07:54 PM

 

Published : 22 Dec 2020 07:54 PM
Last Updated : 22 Dec 2020 07:54 PM

பிரதமர் மோடிக்கு ‘தி லீஜியன் ஆஃப் மெரிட்’ விருது: இந்திய - அமெரிக்க உறவுகளை மேம்படுத்த எடுத்த முயற்சிக்கு அதிபர் ட்ரம்ப் மரியாதை

இந்திய - அமெரிக்க உறவுகளை மேம்படுத்த எடுத்த முயற்சிக்கு மரியாதை அளிக்கும் விதத்தில், அமெரிக்க ராணுவத்தில் வழங்கப்படும் மிக உயர்ந்த 'தி லீஜியன் ஆஃப் மெரிட்' விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி அதிபர் ட்ரம்ப் கவுரவித்துள்ளார்.

இந்த விருதைப் பிரதமர் மோடியின் சார்பில் இந்தியத் தூதர் சரண்ஜித் சிங் சாந்து பெற்றுக்கொண்டார்.

இந்தியாவின் பிரதமராக மோடி கடந்த 2014 மே மாதம் முதல் 2020 ஆகஸ்ட் வரை பல போற்றத்தகுந்த சேவைகளைச் செய்துள்ளார். பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையும், தலைமையும் இந்தியாவை உலகின் மிகப்பெரிய சக்தியாக மாற்றியுள்ளது. உலக அளவிலான சவால்களை எதிர்கொள்ள இந்திய - அமெரிக்க உறவிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என அமெரிக்க அரசு மோடியைப் பாராட்டியுள்ளது.

அமெரிக்க ராணுவத்தால் வழங்கப்படும் இந்த உயரிய விருது தனக்கு அறிவிக்கப்பட்டதற்குப் பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எனக்கு 'தி லீஜியன் ஆஃப் மெரிட்' விருது அறிவித்ததை நினைத்து நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். இது, இந்திய- அமெரிக்க மக்களுக்கு இடையிலான உறவுகளையும், இரு நாட்டு ராஜாங்கரீதியான உறவுகளையும் மேம்படுத்தியதற்கான முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம்.

21-ம் நூற்றாண்டு எப்போதுமில்லாத சவால்களையும், வாய்ப்புகளையும் வழங்கியது. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்கான உலகத் தலைமையை வழங்க, இந்திய- அமெரிக்க உறவு, நம்முடைய மக்களின் பரந்த தனித்துவமான வலிமையை உயர்த்தும்.

இந்திய- அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்த, என்னுடைய அரசு உறுதியாகவும், கடப்பாடுடனும் அமெரிக்க அரசுடனும், இருநாட்டு அதிகாரிகளுடனும் தொடர்ந்து பணியாற்றும் என்பதை நான் 130 கோடி மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் வழங்கிய இந்த விருதை பிரதமர் மோடியின் சார்பில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சாந்து பெற்றுக்கொண்டார்.

'தி லீஜியன் ஆஃப் மெரிட்' விருது கடந்த 1942-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி முதல் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையால், அமெரிக்க ராணுவம், வெளிநாட்டு ராணுவத்தினர், அரசியல் தலைவர்கள் ஆகியோர் செய்த சிறப்பான பணிகள், சேவைகள், சாதனைகளைப் பாராட்டி வழங்கப்படும் உயரிய விருதாகும். வெளிநாட்டினருக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும்.

கடந்த செப்டம்பர் மாதம் குவைத் மன்னராகத் திகழ்ந்த அமீர் ஷேக் ஷபாப் அல் அகமது அல் ஜபார் அல் ஷபாப்புக்கு இந்த விருதை அதிபர் ட்ரம்ப் நீண்டகாலத்துக்குப் பின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x