லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் 6 பயணிகளுக்கு கரோனா உறுதி: ஒருவர் சென்னைப் பயணி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

லண்டனில் இருந்து நேற்று இரவு டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளில் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இவர்கள் 6 பேரும் உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்களா என்பது பரிசோதனைக்குப் பின்புதான் தெரியவரும். இந்த 6 பயணிகளில் ஒருவர் சென்னைக்குச் செல்ல வேண்டிய பயணி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு ஞாயிற்றுக்கிழமை முதல் விதித்துள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. இந்தியாவும் இன்று இரவு முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்கத் தடை விதித்துள்ளது.

சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் அடுத்த ஒரு வாரத்துக்கு சர்வதேச விமானப் போக்குவரத்தையே தங்கள் நாட்டில் ரத்து செய்துள்ளன. தரைவழி எல்லைகளையும் மூடிவிட்டன.

இந்நிலையில் லண்டனில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் 266 பயணிகளுடன் டெல்லி வந்து சேர்ந்தது. பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியா வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது.

அதன்பின் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு பயணி டெல்லியிலிருந்து இணைப்பு விமானம் மூலம் சென்னைக்குச் செல்ல வேண்டியவர். இந்த 6 பயணிகளும் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 6 பயணிகளும் அசல் கரோனாவால் பாதிக்கப்பட்டார்களா அல்லது உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது இவர்களுக்கு நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில்தான் தெரியவரும்.

அதுவரை இவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் என்றுதான் அடையாளப்படுத்த முடியும், உருமாறிய கரோனா தொற்று ஏற்பட்டதா எனக் கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in