Last Updated : 22 Dec, 2020 02:07 PM

 

Published : 22 Dec 2020 02:07 PM
Last Updated : 22 Dec 2020 02:07 PM

பிரதமர் மோடியின் குருத்வாரா வழிபாடு: விவசாயிகள் போராட்டத்தின் விளைவு என்ன?- சிவசேனா கேள்வி

டெல்லியில் உள்ள குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு நடத்திய காட்சி: படம் | ஏஎன்ஐ.

மும்பை

பிரதமர் மோடி, சீக்கிய குரு தேஜ் பகதூர் குருத்வாராவுக்குச் சென்று வந்தபின், வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளின் போராட்ட விளைவு என்னவாக இருந்தது என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஞாயிறன்று டெல்லியில் உள்ள சீக்கிய குரு தேஜ் பகதூர் குருத்வாராவுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். குரு தேஜ் பகதூர் நினைவு நாள் என்பதால், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் பிரமதர் மோடி, சீக்கிய குருத்வாராவுக்குச் சென்றதை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''பிரதமர் மோடி, சீக்கிய குருத்வாராவுக்குச் சென்று வழிபாடு நடத்தி உத்வேகம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதே உத்வேகத்தோடுதான் டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான சீக்கிய விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி, சீக்கிய குருத்வாராவுக்குச் சென்றுவந்தபின், விவசாயிகள் போராட்டத்தின் விளைவுகள் என்ன, ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா?

குருத்வாராவுக்கு பிரதமர் மோடி சென்றபோது அங்கு குர்பானி இசைக்கப்பட்டது. குர்பானி கூறுவது என்னவென்றால், ஒருவர் மனதில் , சிந்தனையில் மாற்றம் ஏற்படாதவரை கடவுளைத் தொழுவதில் பயனில்லை என்கிறது.

புனித நூல்களைப் பலமுறை படித்தாலும், அது கற்றுக்கொடுக்கும் விஷயங்களைப் புரிந்துகொள்ளாவிட்டால் அதனால் பயனில்லை என்கிறது. ஒருவர் தனது வாழ்க்கையின் காலம் முடியும்போது, அவர்களின் கணக்கு சரிபார்க்கப்படும், அவர் என்ன செய்தார் என்று பார்க்கப்படும். காலத்திலிருந்து யாரும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று குர்பானி கூறுகிறது.

பிரதமர் மோடி எது வேண்டுமானாலும் செய்வார் என்று எதிர்க்கட்சிகள் அவரை விமர்சிப்பது சரியல்ல. குருத்வாராவுக்கு மோடி சென்றதில் அரசியல் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. சீக்கியர்கள் மீது பிரதமர் மோடி அன்பாக இருந்தால், பஞ்சாப் விவசாயிகள் ஏன் கடும் பனியில் போராடுகிறார்கள் என்று கேட்கிறார்கள்.

ஆனால், பிரதமர் மோடியின் நம்பிக்கையை யாரும் கேள்விகேட்க முடியாது. குரு தேஜ் பகதூர் மிகப்பெரிய துறவி. சீக்கியர்கள் மட்டுமல்ல, இந்த பூமியில் உள்ள ஒவ்வொருவருவரும் குரு தேஜ் பகதூரை வணங்கிட வேண்டும்''.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x