Last Updated : 22 Dec, 2020 01:26 PM

 

Published : 22 Dec 2020 01:26 PM
Last Updated : 22 Dec 2020 01:26 PM

அரசியல் காத்திருக்கலாம்; வளர்ச்சி காத்திருக்காது: அரசியல் கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடாது: பிரதமர் மோடி பேச்சு

தேசத்தின் வளம் ஒவ்வொரு குடிமகனையும் சார்ந்தது. ஒவ்வொரு குடிமகனும் வளத்திலிருந்து பலன் பெற உரிமை உண்டு. அரசியலும், மக்களும் காத்திருக்கலாம். ஆனால், வளர்ச்சி காத்திருக்க முடியாது என அலிகர் முஸ்லிம பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சிறப்பிக்கும் வகையில் தபால் தலைகளை வெளியிட்டார். கடந்த 50 ஆண்டுகளில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

''அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் கடந்த 100 ஆண்டுகளாக உலகின் பல நாடுகளுடன் இந்தியாவின் நட்புறவு வலுவடைய பங்களிப்பு செய்துள்ளது. அலிகர் பல்கலைக்கழகத்தில் உருது, அரபி மொழி, பாரசீக மொழிகளில் இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்துச் செய்யப்படும் ஆய்வுகள் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகோடு இந்தியக் கலாச்சாரம் கொண்டுள்ள உறவுகளுக்குப் புதிய உத்வேகம் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.

கரோனா வைரஸ் காலத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சமூகத்துக்குப் பெரும் பங்காற்றியது. இலவச கரோனா பரிசோதனை, படுக்கைகள், பிளாஸ்மா வங்கி, தனிமைப்படுத்துதல் அறை எனப் பலவற்றை ஏற்பாடு செய்து, பிஎம் கேர்ஸ் நிதிக்கும் அதிகமான பங்களிப்பைச் செய்து சமூகத்துக்கான நெருக்கத்தை வெளிப்படுத்தியது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்கள், புலமை பெற்றவர்கள் உலகில் பல நாடுகளில் இருக்கின்றனர். அவர்களை நான் வெளிநாடுகளில் சந்திக்கும்போது, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் குறித்துப் பெருமையுடன் பேசுவார்கள். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் இந்தியக் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாகத் திகழ்கிறார்கள்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டிடத்திலும் வரலாறு பிணைந்துள்ளது. இந்தியாவின் மதிப்புமிக்க இடமாகும். இந்தப் பல்கலைக்கழகம் சிறிய நகரம் போன்று, சிறிய இந்தியா போன்றது. பன்முகத்தன்மைதான் அலிகர் பல்கலைக்கழகத்தின் பலமாகும். இந்த பலத்தை நாம் மறந்துவிடக்கூடாது, பலவீனமடையவிடக் கூடாது.

இந்த நாட்டின் வளம் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. ஒவ்வொருவரும் அதிலிருந்து பலன்பெற வேண்டும். அந்த நோக்கத்தோடுதான் மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

மதத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்க்காமல் மத்திய அரசு கொள்கைகளை வகுத்து, எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் பலன்கள் கிடைத்து வருகின்றன. எந்தவிதமான பாகுபாடுமின்றி நாட்டில் 2 கோடி மக்களுக்கு கான்கிரீட் வீடு கிடைத்துள்ளது. எந்தவிதமான பாகுபாடுமின்றி 8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரை 50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இந்த நாடு வளர்ச்சியை நோக்கி நகரும்போது, வளர்ச்சி அடையும்போது, ஒவ்வொரு குடிமகனும் அதிலிருந்து எந்திவிதமான பாகுபாடின்றி பலன் பெறலாம். மக்கள் காத்திருக்கலாம், அரசியல் காத்திருக்கலாம், ஆனால், வளர்ச்சி காத்திருக்காது. அரசியல் கண்ணாடி கொண்டு வளர்ச்சியைப் பார்க்கக் கூடாது. சிலர் எங்கு பார்த்தாலும் எதிர்மறையைப் பரப்புகிறார்கள். புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒரு தளத்தில் ஒன்றுசேர வேண்டும்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x