

புதிய வகை கரோனா வைரஸ் பரவல் தற்போது மக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. பிரிட்டனில் தற்போது பரவி வரும் இந்தத் தொற்று இந்தியாவுக்கு வரக்கூடாது என்பதால், பிரிட்டனிலிருந்து இம்மாதம் ஹைதராபாத் வந்த 2,291 பேரிடம் தெலங்கானா அரசு மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
புதிய கரோனா தொற்று பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் பரவி வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் மக்கள் மேலும் பீதி அடையத் தொடங்கியுள்ளனர். முக்கிய நகரங்களில் விமானம் மூலம் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இம்மாதம் இதுவரை பிரிட்டனிலிருந்து ஹைதராபாத் வந்தவர்கள் குறித்து விவரம் சேகரிக்க தெலங்கானா அரசு உத்தரவிட்டது. அதன்படி, இம்மாதம் 2,291 பேர் பிரிட்டன் நாட்டிலிருந்து ஹைதராபாத் வந்துள்ளது தெரியவந்தது.
இவர்களின் விவரங்களைச் சேகரித்து, அவர்களுக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்த மருத்துவ அதிகாரிகள் குழு முடிவு செய்து, அதன்படி, அவர்களுக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஒருவேளை தொற்று இருந்தால் அவர்களுக்கு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், நெகட்டிவ் வந்தாலும் அவர்களை 7 நாட்கள் வரை தனிமைப்படுத்தவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.