

ஏழுமலையானை தரிசனம் செய்ய பல்வேறு ஊர்களிலிருந்து திருப்பதிக்கு வந்த பக்தர்களிடம் இலவச தரிசன டிக்கெட் இல்லாத காரணத்தினால் அவர்களைத் திருமலைக்கு தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள், காவல் துறையினர் இன்று காலை அனுமதிக்கவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலிபிரி அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை முதன்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதனால், கடந்த ஒரு வாரம் முன்பே இந்த 10 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது. தினமும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மூலம் 10 நாட்களுக்கு 2 லட்சம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன.
ஆனால், இந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் சில மணிநேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. இதன் காரணமாக, ஏராளமான பக்தர்கள் டிக்கெட்டுகள் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனிடையே, சர்வ தரிசனத்திற்காக பக்தர்கள் அலைமோதுவர் என்பதை உணர்ந்த தேவஸ்தானம், கரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில், 25-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வீதம் 1 லட்சம் தர்ம தரிசன டிக்கெட்டுகள் வெறும் திருப்பதி பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படுமென அறிவித்தது. இது மற்ற ஊர் மற்றும் மாநில பக்தர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
சுவாமி தரிசனத்தில் உள்ளூர், வெளியூர் என்பது ஏன்? எனக் கேள்வி கேட்கத் தொடங்கினர். தற்போது தினமும் 35 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். மத்திய அரசின் நிபந்தனைகளின்படிதான் நாங்கள் பக்தர்களை அனுமதிக்க இயலும் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
ஆனால், இம்மாதம் 24-ம் தேதி வரை வழக்கம்போல் அனைத்துத் தரப்பு பக்தர்களும் சுவாமியை தரிசிக்கலாம் என தேவஸ்தானம் கூறி இருந்தது. இதனால், பல வெளி மாவட்டம் மற்றும் மாநில பக்தர்கள் திருப்பதிக்கு வரத் தொடங்கினர்.
ஆனால், இங்கு வந்தால் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது என பக்தர்கள் உணரத் தொடங்கினர். வரும் 24-ம் தேதி வரை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டதால், மற்ற பக்தர்களை அனுமதிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதனை அறியாத பக்தர்கள், பேருந்து, கார்கள், இருசக்கர வாகனங்கள் மூலம் பல வெளி மாநிலங்களிலிருந்தும், ஆந்திராவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கடந்த 2 நாட்களாக திருப்பதியில் குவிந்து வருகின்றனர். இவர்களைச் சமாளிக்க முடியாமல் தேவஸ்தான கண்காணிப்பு, பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.
விடிய விடிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று (டிச. 22) முதல் அலிபிரி, விஷ்ணு நிவாசம், மாதவம், பூதேவி காம்ப்ளக்ஸ் போன்ற டிக்கெட்டுகள் வழங்கும் மையங்கள் முன் காத்திருக்கின்றனர். ஆனால், ஏற்கெனவே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதால், இவர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்க முடியாது என தேவஸ்தான ஊழியர்கள் கூறியதைத் தொடர்ந்து, பக்தர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
அலிபிரி கருடன் சிலை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் காவல் துறையினர் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால், பக்தர்கள் சுவாமியை தரிசிக்காமல் சொந்த ஊர் திரும்ப முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
மேலும், இவர்களைத் திருமலைக்கு அனுமதிக்காததால், தேவஸ்தானத்திற்கும், தேவஸ்தான அதிகாரிகளுக்கும் எதிராக கோஷமிட்டனர். உணவு, குடிநீர் இன்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களில் கர்னூலில் இருந்து வந்த ஒரு வயதான பெண்மணி மயக்கம் அடைந்து சரிந்து விழுந்தார். அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
வரும் ஜனவரி 3-ம் தேதி வரை ஆன்லைன் மற்றும் தர்ம தரிசன டிக்கெட்டுகள் வழங்கிவிட்டதால், பக்தர்கள் யாரும் திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய இயலாது என்பதால், பக்தர்கள் யாரும் ஏழுமலையான் தரிசனத்திற்குத் திருப்பதிக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.