மக்களுக்கு அரசை கேள்வி கேட்கும் அதிகாரம் தேவை: பிரதமர்

மக்களுக்கு அரசை கேள்வி கேட்கும் அதிகாரம் தேவை: பிரதமர்
Updated on
1 min read

'அரசை நோக்கி கேள்வி கேட்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டியது அவசியம், அதுவே ஜனநாயகத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்' என்று பிரதமர் மோடி கூறினார்.

மத்திய தகவல் ஆணையத்தின் 10-வது ஆண்டு விழா டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரித்தார்.

மேலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை குறிப்பிட்டு பேசிய பிரதமர், "நாட்டு மக்களுக்கு அரசுக்கும் இடையே நம்பிக்கை நிலவ வேண்டியது மிகவும் அவசியம். அதனை ஏற்படுத்தவே வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது.

சமீபத்தில் அலைக்கற்றை ஏலம் இணையதளத்தின் மூலம் நடத்தப்பட்டது. இதன்மூலம் அதன் அனைத்து அம்சங்களும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இருந்தது.

அதேபோல, தகவல் பெறும் உரிமைச் சட்டமும் பயன்படுத்தப்பட வேண்டும். அதுவே அரசின் முதல் முக்கிய வெற்றியாக அமையும். சமகாலத்தில் ரகசியமாக என்ற ஒன்று இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. அனைத்தையும் வெளிப்படைத்தன்மையோடு அரசு கையாண்டால் அது மக்களுக்கு அதிகமான பலனைத் தரும்.

எந்த ஒரு விஷயமும் இணையத்தை அடைந்த பின்னர், அதில் வெளிப்படைத்தன்மை உயர்கிறது. அதன் மூலம் நம்பிக்கையும் ஏற்படுகிறது. அரசின் செயல்பாடுகளில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கம்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் தகவல்களை பெறுவதற்கு மட்டும் அல்ல, அரசை நோக்கி கேள்வி எழுப்பவும் தான். எனவே மக்கள் அதனைப் பிரதானமாக பயன்படுத்த வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in