தனியார் நிறுவனங்கள் உதவியுடன் புலிகள் பாதுகாப்புத் திட்டம்: நாட்டில் முதல் முறையாக கர்நாடகாவில் அறிமுகம்
புலிகளைப் பாதுகாக்க தனியார் நிறுவனங்களின் நிதி உதவியுடன் 'புலிக்கு உதவுவீர்’ என்ற திட்டத்தை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான அறிவிப்பை பெங்களூரில் சனிக்கிழமை வெளியிட்ட மாநில வனத்துறை அமைச்சர் ரமாநாத் ராய், “யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளைப் பாதுகாக்க தனியார் நிறுவனங்கள் பெருமளவில் நிதி தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். கர்நாடக அரசின் சுற்றுச்சூழல், வன உயிரிகள் மேம்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் சார்பில் பெங்களூரில் 'வன உயிரிகள் பாதுகாப்பு' குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கர்நாடக வனத்துறை அமைச்சர் ரமாநாத் ராய், மாநில தலைமைச் செயலாளர் கவுசிக் முகர்ஜி, வனத் துறை முதன்மைச் செயலாளர் மதன்கோபால் மற்றும் பல தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் ரமாநாத் ராய் பேசியதாவது: ''கர்நாடக அரசு தனியார் துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதால், உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் பெங்களூரில் செயல்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில் கர்நாடகா முன்னணியில் இருப்பதைப் போலவே, சுற்றுச்சூழல், வன உயிரிகள், சுற்றுலாத் துறையிலும் முன்னணியில் இருக்கிறது.
மாநிலத்தில் நாகர்ஹொலே, பத்ரா, பந்திப்பூர், தணடேலி-அன்ஷி, பிலிகிரிரங்கசுவாமி மலை ஆகிய இடங்களில் 5 புலிகள் சரணாலயங்கள் உள்ளன.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் அதிக அளவில் புலிகளும், யானைகளும் வசிப்பதால், இந்த மாநிலத்தை 'புலி மாநிலம்' என்றும், ‘யானை மாநிலம்’ என்றும் அழைக்கின்றனர்.
தனியார் உதவ வேண்டும்
வனத்தையும்,வன விலங்கு களையும் முழுமையாகப் பாதுகாப்பதும், சவால்களை எதிர்கொள்வதும் வனத்துறைக்கு மிகுந்த சிரமத்தைத் தருகிறது. வன விலங்குகளைப் பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து வனத்துறை மட்டுமே மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. புலிகளின் ஒரு குடும்பத்தைப் பராமரிக்க மட்டும் ஆண்டிற்கு 10 லட்சம் ரூபாய் செலவாகிறது. கர்நாடகாவில் ஒவ்வொரு வன சரணாலயத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும், தரம் உயர்த்தவும் ஆண்டுதோறும் ரூ.10 முதல் 35 கோடி வரை அரசு செலவிடுகிறது.
யானைகளுக்கு உதவும் வகையில் வனத்தில் நீர் நிலைகள் உருவாக்குவதற்கு கடந்த ஆண்டு மட்டும் அரசு ரூ.1 கோடி செலவிட்டுள்ளது.
எனவே, வனத்தை அழிவில் இருந்து மீட்டு பசுமையாக பராமரிக்கவும், அழிந்துவரும் வனவிலங்குகளைப் பேணிப் பாதுகாக்கவும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் தங்களுடைய மொத்த லாபத்தில் 2 சதவீதத்தை இதுபோன்ற பணிகளுக்கு செலவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேருவோருக்கு வருமானவரிச் சலுகை அளிக்கும் வகையில் கர்நாடக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது தனியார் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதற்காக 'புலிக்கு உதவுவீர்' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
இந்தத் திட்டத்தின் மூலம் அழிந்துவரும் புலி இனத்தை காப்பாற்ற இந்நிறுவனங்கள் அரசுக்கு நிதி வழங்கலாம்''என்றார்.
