

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் செக்டார், சாக்ரி எல்லைச் சாவடி அருகே கடந்த சனிக்கிழமை இரவு, ட்ரோன் ஒன்று பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைவதை பிஎஸ்எப் வீரர்கள் கண்டனர். உடனே அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனினும் அதை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அந்த ட்ரோன்பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் குருதாஸ்பூர் அருகே சலாச் என்ற கிராமத்தில் 11 கையெறி குண்டுகள் இருந்த ஒரு பிளாஸ்டிக் பெட்டியை போலீஸார் நேற்று முன்தினம் கண்டெடுத்தனர். இதனை கடந்த சனிக்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ட்ரோன் வீசியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதுகுறித்து பஞ்சாப் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “எல்லைக்கு அப்பாலிருந்து தீவிரவாதிகளுக்காக ட்ரோன் மூலம் வீசப்படும் ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகளை தொடர்ந்து கைப்பற்றி வருகி றோம். கடந்த 15 மாதங்களில் 8-வது முறையாக 11 கையெறி குண்டுகளை தற்போது கைப்பற்றியுள்ளோம்.
கடும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த ஆர்ஜெஸ் வகை கையெறி குண்டுகள், இதற்கு முன் இந்தியாவில் நடந்த முக்கிய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.