

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விமான நிலையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை (ஐ.பி.) இயக்குநர் ஆசிப் இப்ராஹிம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பாதுகாப்புப் படையினர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விமான நிலையங்களை எளிதாக சென்றடையும் வகையில் பாதுகாப்புப் படை வீரர்களை அருகிலுள்ள முகாம்களில் தங்கவைக்க வேண்டும். விமான கடத்தல் தடுப்புப் பிரிவினரை அவ்வப்போது ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கராச்சி தாக்குதல் சம்பவம் தொடர்பாக அறிக்கையை கோரியுள்ள உள்துறை அமைச்சர், அது போன்ற தாக்குதல் சம்பவங்கள் இந்திய விமான நிலையங்களில் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விமான நிலையங்களில் பாதுகாப்பு
கராச்சியில் நிகழ்ந்த தீவிர வாதிகள் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி போலீஸாரும், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளையும், அவர்கள் கொண்டு வரும் பொருள்களையும் சோதனையிடுவதில் மிகவும் கவனத்துடன் இருக்கும்படி பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமான நிலையங்களுக்கு வெளியே தடுப்புகளை அமைத்து, வாகன சோதனையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில், சிறப்பு அதிரடிப் படையை சேர்ந்த 50 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வரும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் மற்றும் தமிழக போலீஸாருடன் இணைந்து இவர்கள் செயல்படுவார்கள்.