

பிஹாரில் 2500 ஆண்டுகால பழமையான குப்தர் கால தொல்பொருள் எச்சங்களைப் பாதுகாப்பதற்காக கோசி நதியின் பாதை திசை திருப்பி விடப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பிஹார் மாநிலத்தில் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிகவும் பழமையான கிராமம் குவாரிடி. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கிராமம் பிஹ்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இதன் பழமைத் தன்மையை நேரில் காண பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவிலிருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குவாரிடிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவருடன் சட்டமன்ற உறுப்பினர் குமார் ஷைலேந்திரா மற்றும் பல அதிகாரிகள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் உடன் சென்றனர். குவாரிடியில் அங்கு நடந்த அகழ்வாய்வின்போது பூமியின் அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பண்டைய சுட்ட மண் பாத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள், பல்வேறு கருவிகள், முக்கோணச் செங்கற்கள், செப்பு நாணயங்கள் மற்றும் புதை படிவங்களைப் பார்வையிட்டார்.
பிஹார் பாரம்பரிய மேம்பாட்டுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் விஜய் குமார் சவுத்ரி அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்த விவரங்களை முதல்வருக்கு வழங்கினார்.
இதுகுறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
''வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய பொருட்களை மீட்டெடுப்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஷைலேந்திர ஜீ (குமார் ஷைலேந்திர, பிஹ்பூரைச் சேர்ந்த எம்.எல்.ஏ) எனக்குத் தெரிவித்திருந்தார். வல்லுநர்கள் குழு கூட அதன் ஆரம்ப அறிக்கையில், இந்த இடம் ஒரு வரலாற்று இடம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இங்குள்ள பழமையான பொருட்களை நான் கவனமாகப் பார்வையிட்டேன். குவாரிடி கிராமத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட இப்பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு மிகவும் பழமையானவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்பொருட்கள் அனைத்தும் குஷானர்கள், மவுரியர்கள் மற்றும் குப்தர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களாக இருக்கலாம் எனத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பழங்கால மற்றும் வரலாற்று இடத்திருந்து மீட்கப்பட்ட இந்த எச்சங்கள் 2,500 ஆண்டுகளுக்கு மேலானவை. அந்த இடத்தைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இப்பகுதியைப் பாதுகாப்பதற்காக கோசி நதியை அதன் பழைய போக்கிற்குத் திருப்புவது முக்கியம். பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே இருக்கும் பொருள்களை வெள்ளம் மற்றும் அரிப்புகளிலிருந்து காப்பாற்றுவது நமது கடமை.
கிராமத்தின் அருகே செல்லும் கோசி நதி தற்போது அந்த இடத்திலிருந்து 300-400 மீட்டர் தொலைவில் பாய்கிறது. அதே நேரத்தில் அதன் பழைய பாதை கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வரலாற்று எச்சங்களைப் பாதுகாக்க கிராமத்தில் அருகில் செல்லும் நதியின் பாதையைத் திருப்புவது சரியான திட்டமிடலுக்குப் பிறகு செய்யப்படும்.
இதற்கிடையில் இக்கிராமத்தைச் சுற்றிலும் மிகப்பெரிய அகழாய்வுப் பணி மீண்டும் மேற்கொள்ளப்படும். இந்த இடம் உண்மையில் எல்லாவகையிலும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உறுதி செய்யப்படுமானால் இப்பகுதி முழுமையாக மேம்படுத்தப்படும். இதனால் நாட்டு மற்றும் உலக மக்கள் இதைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்''.
இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.