

கோவிட் 19 தடுப்பூசி அனைவருக்கும கட்டாயம் இல்லை; ஆனால் அவசியமானது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 26,624 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் மொத்த கரோனா வைரஸ் பாதிப்புகள் ஞாயிற்றுக்கிழமை 1,00,31,223 ஐ எட்டியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் உள்நாட்டு தடுப்பூசி உருவாக்கத்தில் விரைந்து பணியாற்றி வருவதாகவும், வரவிருக்கும் 6 முதல் 7 மாதங்களில் சுமார் 30 கோடி மக்களை தடுப்பூசி போடும் திறன் இந்தியாவுக்கு இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டி:
சர்வதேச போக்குகளைக் கவனித்து, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் யார்யாருக்கு தடுப்பூசிகள் அளிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளும். ஆனால் ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இருந்தால், முதலில் அதைப் பெறுவது யார் என்பதில் முன்னுரிமை அளிப்பது அவசியம்.
சர்வதேச நடைமுறைகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு முடிவை எடுப்பதற்கு முன், நிபுணர்கள், அமைச்சகங்களில் உள்ளவர்கள், மாநில அரசுகளில் உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிப்பதில் ஈடுபடுவோர் ஆகியோரை அரசாங்கம் கலந்தாலோசித்து வருகிறது.
நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் உள்நாட்டு தடுப்பூசி உருவாக்கத்தில் விரைந்து பணியாற்றி வருகின்றனர், வரவிருக்கும் ஆறு முதல் ஏழு மாதங்களில் சுமார் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடும் திறன் இந்தியாவுக்கு இருக்கும். தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு முன்னுரிமை அளித்து ஜனவரி மாதத்திற்குள் கோவிட் -19 க்கு தடுப்பூசி போடத் தொடங்க வாய்ப்புள்ளது.
முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும் முதல் ஒரு கோடி பேர் தனியார் மற்றும் பொதுத்துறையில் உள்ள சுகாதார ஊழியர்களாக இருப்பார்கள். தடுப்பூசி போடப்படும் அடுத்த இரண்டு கோடி பேர் முன்களப் பணியாளர்களான, துப்புரவு ஊழியர்கள், காவல்துறை மற்றும் பிற முன்னணி தொழிலாளர்கள், அவர்களைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
கோவிட் -19 காரணமாக இறந்தவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம். இந்தப் பிரிவில் சுமார் 26 கோடி மக்கள் உள்ளனர்.
அவர்களுக்கு அடுத்த நிலையில், ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் போன்ற 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
அரசாங்கம் அவர்களிடம் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள மக்களை அணுகும், ஆனால் யாராவது தடுப்பூசி எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றால், ஒவ்வொருவரையும் கட்டாயப்படுத்த முடியாது.
கரோனா வைரஸ் தடுப்பூசி யாரையும் அரசாங்கம் கட்டாயப்படுத்தாது, ஆனால் தடுப்பூசியின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கப்படும். இது குறித்து சரியான தகவல்களை அரசாங்கம் மக்களுக்கு வழங்கும்.
மக்களிடம் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து தடுப்பூசி தயக்கம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும். இதுகுறித்து அரசாங்கம் விழிப்புணர்வைப் பரப்புவதோடு, இது அவர்களின் சொந்த நலனுக்காகவும், நன்மைக்காகவும் தடுப்பூசி வழங்கப்படுவதாக மக்களுக்கு அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.