

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் எம்.கே.பர்தி. நாக்பூர் மாவட்டத்தின் சாவ்னெர் கிராமத்தில் கடந்த 1920-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி பிறந்தவர். நாக்பூர் மோரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற பின் மும்பையில் குடியேறினார். பத்திரிகையாளராக தனது வாழ்க்கை தொடங்கினார். மத்திய தகவல் சேவை துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். கடந்த 1978-ம் ஆண்டு தனது 58-வதுவயதில் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். கடந்த 18-ம் தேதி தனது 100-வது பிறந்தநாளை பூர்த்தி செய்துள்ளார்.
புனேவில் உள்ள அகில இந்தியவானொலி இவரிடம் சிறப்பு பேட்டிஒன்றை ஏற்பாடு செய்தது. அப்போது ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள், வேதனைகளை நினைவுகூர்ந்து பர்தி பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது:
மராத்தி செய்தித் தாள் ஜனசக்தியில்தான் எனது பத்திரிகை தொழிலை தொடங்கினேன். அதன்பின், கடந்த 1942-ம் ஆண்டு மகாத்மா காந்தி தொடங்கிய ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் குறித்து மும்பையில் செய்தி சேகரிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. காந்தி எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தலைவர். அவரை மக்கள் பயபக்தியுடன் பின்பற்றி சென்றனர். அப்படிப்பட்ட தலைவர் நடத்திய ஒரு இயக்கம் குறித்து செய்தி சேகரித்து வழங்கினேன். அந்த நாட்கள் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தன.
அதேவேளையில், நான் மனவேதனை அடைந்த நிகழ்ச்சிகளும் நடந்தன. கடந்த 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை அவசரகால நிலை (எமர்ஜென்சி) இருந்தது. அப்போது, பத்திரிகை தகவல்அலுவலகத்தின் (பிஐபி) தணிக்கைக் குழுவில் எனக்குப் பணி வழங்கப்பட்டது. அந்தப் பணியை நான் விரும்பவில்லை. எனினும், அப்போதைய அரசு விரும்பாத செய்திகளை பத்திரிகைகளில் இருந்து நீக்க வேண்டியிருந்தது.
இவ்வாறு பர்தி கூறினார்.
நூறாண்டுகள் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ரகசியம் குறித்து கேட்ட போது, ‘‘இலக்கியம் சார்ந்த படைப்புகள், விமர்சனங்களில் நான் இன்றும் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான் அதற்கு காரணம். மகிழ்ச்சியாக இருங்கள். நிலைமை மாறும். துன்பமும் மாறும்’’ என்று சிரித்தபடி கூறுகிறார்.
புதிய தலைமுறையினருக்கு நீங்கள் என்ன செய்தியை சொல்ல விரும்புகிறீர்கள் என்றகேள்விக்கு, ‘‘கடினமாக உழையுங்கள். புதுமைகளை படைக்க விரும்புங்கள்; போதைப் பொருட்களை புறந்தள்ளுங்கள்’’ என்று ரத்தின சுருக்கமாக சொல்லி பேட்டியை முடித்தார் பர்தி.
நூறாண்டுகளை கடந்த பர்திக்கு நாடு முழுவதும் இருந்து சமூக வலைதளங்களில் பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.