Published : 21 Dec 2020 03:14 AM
Last Updated : 21 Dec 2020 03:14 AM

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்பு: நாடு முழுவதும் 27-ம் தேதி மணியோசை எழுப்ப மக்களுக்கு வேண்டுகோள்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் சிங்கு எல்லை பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 25-வது நாளாக நீடித்த நேற்றைய போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.படம்: பிடிஐ

புதுடெல்லி

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக மருத்துவர்கள், செவிலியர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். தங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நாடுமுழுவதும் வரும் 27-ம் தேதி மக்கள் மணியோசை எழுப்ப வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விபத்து, உடல்நலக் குறைவு,கடும் குளிர் காரணமாக இதுவரை33 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த விவசாயிகளை நினைவுகூரும் வகையில் பஞ்சாப், ஹரியாணா முழுவதும் நேற்று நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன. டெல்லியின் சிங்கு எல்லைப்பகுதியில், உயிரிழந்த விவசாயிகளின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதுகுறித்து அகில இந்திய கிஷான் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பஞ்சாப், ஹரியாணாவில் சுமார் ஒரு லட்சம் கிராமங்களில் மனித சங்கிலி, நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தில் பஞ்சாபை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்களும் இணைந்துள்ளனர். இதுகுறித்து லூதியாணாவைச் சேர்ந்த செவிலியர் ஹர்ஷ்தீப் கவுர் கூறும்போது, ‘‘விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதற்காக டெல்லிவந்துள்ளோம். கடும் குளிரில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவோம்’’ என்று தெரிவித்தார்.

மருத்துவர் சுக்மான் கவுர் கூறும்போது, ‘‘பஞ்சாபைச் சேர்ந்த அனைவரும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இதை வலியுறுத்தி மருத்துவர்கள், செவிலியர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

பஞ்சாபைச் சேர்ந்த டாட்டூ கலைஞர்களும், விவசாயிகள் போராட்டத்தில் இணைந்துள்ளனர். பஞ்சாப் மாநில வரைபடம், டிராக்டர், வேளாண் கருவிகள், பயிர்சாகுபடி தொடர்பான டாட்டூகளைவிவசாயிகளுக்கு அவர்கள் இலவசமாக வரைந்து வருகின்றனர்.

போராட்டம் குறித்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் கூறியதாவது:

விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்தீத் சிங்: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ம்தேதி முதல் 27-ம் தேதி வரை ஹரியாணா நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடுவோம். சுங்க கட்டணம் வசூல் செய்வதை தடுப்போம்.

கரோனா வைரஸுக்கு எதிராகபோராடிய சுகாதாரப் பணியாளர்களை உற்சாகப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் மணியோசை எழுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதேபோல நாங்களும் நாட்டு மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். வரும் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் 'மன் கி பாத்' வானொலி உரை ஒலிபரப்புசெய்யப்படும்போது, நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மணியோசை எழுப்ப வேண்டும்.

பாரதிய கிசான் சங்கத் தலைவர் மன்ஜித் சிங் ராய்: விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறது. வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும். அப்படி செய்தால் அடுத்த நிமிடமே விவசாயிகள் வீடு திரும்ப தொடங்கிவிடுவார்கள். ஆனால் எங்களுக்கு இதுவரை எவ்வித நம்பிக்கையும் ஏற்படவில்லை.

ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ்: டிசம்பர்21-ம் (இன்று) தேதி டெல்லி உட்படநாடு முழுவதும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவர்.

விவசாய சங்க மூத்த தலைவர் ராகேஷ் திகேத்: டிசம்பர் 23-ம்தேதி விவசாயிகள் தினத்தை உற்சாகமாக கொண்டாடுவோம். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டு மக்கள் அனைவரும் அன்று மதிய உணவை தவிர்க்கவேண்டும். எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, டெல்லி, உத்தரபிரதேச எல்லைப் பகுதியான காஜிபூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்ட போலீஸார், விவசாயிகளின் டிராக்டர்களை பறிமுதல் செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி. விவசாயிகளிடம் மோடி உரை

உத்தரபிரதேச விவசாயிகளிடையே வரும் 25-ம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, அன்று விவசாயிகளிடம் பிரதமர் உரையாற்ற உள்ளார். பிரதமரின் உரை மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விவசாயிகளிடம் தவறான தகவல்களைக் கூறி வருவதாகவும் உ.பி. முழுவதும் 2,500 இடங்களில் விவசாயிகள் விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஸ்வதந்திர தேவ் சிங் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x